இந்தியா
சுப்ரீம் கோர்ட், விஜய் மல்லையா

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டு

Published On 2021-12-01 02:46 GMT   |   Update On 2021-12-01 02:46 GMT
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா வேண்டுமென்றால் ஆஜராகலாம் அல்லது அவரது வக்கீல் வாயிலாக வாதங்களை முன்னெடுக்கலாம்.
புதுடெல்லி :

வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அதனை மீறி 40 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள தொகையை அவரது பிள்ளைகளுக்கு பரிவர்த்தனை செய்தது தொடர்பாக கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

விஜய் மல்லையாவுக்கு எதிரான கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள தகவல் சற்று முன்னர்தான் கிடைத்தது. அதை கோர்ட்டிடம் பகிர விரும்புகிறேன் என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் இங்கிலாந்தில் இறுதி கட்டத்தை எட்டி இருப்பதாகவும், ஆனால் அந்த நடவடிக்கைகள் ரகசியமானவை என்பதால் அவை குறித்து அறிய முடியவில்லை என்றும் மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை பதிவு செய்து கொள்கிறோம்.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட விவகாரத்தில் தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா வேண்டுமென்றால் ஆஜராகலாம் அல்லது அவரது வக்கீல் வாயிலாக வாதங்களை முன்னெடுக்கலாம். கோர்ட்டு அவமதிப்பு வழக்கு விசாரணை ஜனவரி 18-ந்தேதி முதல் தொடங்கி நடைபெறும். இந்த விவகாரத்தில் கோர்ட்டுக்கு உதவ மூத்த வக்கீல் ஜெய்தீப் குப்தாவை நியமிக்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News