செய்திகள்
உத்தவ் தாக்கரே

ஒமிக்ரான் தொற்று நோயை தடுப்பது எளிது: உத்தவ் தாக்கரே

Published On 2021-11-30 02:54 GMT   |   Update On 2021-11-30 02:54 GMT
வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் தகவல்கள் தொடர்ந்து பெறப்பட வேண்டும். வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், சரியான நேரத்தில் தொற்றுநோயை தடுக்கலாம்.
மும்பை :

நாட்டையே முடக்கிபோட்ட கொரோனா முடிவுக்கு வருவதாக கூறிவந்த நிலையில், ஒமிக்ரான் என்ற புதிய அவதாரம் எடுத்து இந்த நோய் தொற்று மீண்டும் உலகை அச்சுறுத்த தொடங்கி உள்ளது.

தென்ஆப்பரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனப்படும் இந்த புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டது என கூறப்படுகிறது.

இந்த நோய் பாதிப்பு ஆஸ்திரேலியா, இஸ்ரேல் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே நோய் தங்கள் நாட்டில் பரவுவதை தடுக்க பல நாடுகள் பயண கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்தியாவிலும் விமான நிலையங்களில் பரிசோதனை மற்றும் நோய் பரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா வைரசின் புதிய மாறுபாடு குறித்து மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் நேரடியாக மும்பை அல்லது மராட்டியத்தின் மற்ற விமான நிலையங்களில் தரையிறங்காமல், வேறு மாநிலங்களில் இறங்கி உள்நாட்டு விமானம், சாலை அல்லது ரெயில் மூலம் மாநிலத்திற்கு வருவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்படிப்பட்டவர்களை எப்படி பரிசோதிப்பது என்பதுதான் எங்கள் கேள்வி. இதுகுறித்து பிரதமருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளின் தகவல்கள் தொடர்ந்து பெறப்பட வேண்டும். வெளிநாட்டு பயணிகளை கண்காணிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினால், சரியான நேரத்தில் தொற்றுநோயை தடுக்கலாம்.

மராட்டியத்தில் ஒமிக்ரான் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இருப்பினும் தற்போது நோய் பாதிப்பு அதிகரித்துவரும் நாடுகளில் மிகப்பெரிய கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே தற்போது நம்மை நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முககவசம் மிகவும் அவசியம்.

12 நாடுகளை சேர்ந்த பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல அவர்கள் இங்கு இறங்கியதும் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News