செய்திகள்
மம்தா பானர்ஜி

பிஎஸ்எப் அதிகார வரம்பு நீட்டிப்பு, திரிபுரா வன்முறை... பிரதமரிடம் பேசுகிறார் மம்தா

Published On 2021-11-22 10:41 GMT   |   Update On 2021-11-22 10:41 GMT
திரிபுராவில் அதிகாரத்தை கொடூரமாக பயன்படுத்துவதை மனித உரிமை ஆணையம் ஏன் கவனிக்கவில்லை என்று பானர்ஜி கேள்வி எழுப்பினார்.
கொல்கத்தா:

திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்வருமான மம்தா பானர்ஜி 4 நாட்கள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார். பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் சூழ்நிலையில் டெல்லியில் முகாமிடும் அவர், எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். 

வரும் தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.  டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தனது மாநிலத்துக்கு தேவையான நிதியை கேட்டு பெறுவார் என்றும் தெரிகிறது.

இந்நிலையில், கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, டெல்லி சுற்றுப்பயணத்தின்போது பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பின்போது எல்லைப் பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு விரிவாக்கம், திரிபுரா வன்முறை ஆகிய பிரச்சினைகள் குறித்து பேச உள்ளதாகவும் கூறினார்.

திரிபுராவில் அதிகாரத்தை கொடூரமாக பயன்படுத்துவதை மனித உரிமை ஆணையம் ஏன் கவனிக்கவில்லை என்றும் பானர்ஜி ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார். திரிபுரா முதலமைச்சரும் (பிப்லப் தேவ்) அவரது அரசாங்கமும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறுவதாகவும், அரசுக்கு எதிராக உயர் நீதித்துறையிடம் முறையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.

திரிபுராவில் வரும் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல் கட்சியும் தடுக்கப்படவில்லை என்பதை திரிபுரா அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News