செய்திகள்
பாஸ்போர்ட்

பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு ஒரிஜினல் பாஸ்போர்ட் - வாடிக்கையாளரை அதிரவைத்த அமேசான்

Published On 2021-11-05 22:09 GMT   |   Update On 2021-11-05 22:09 GMT
கேரளாவில் பாஸ்போர்ட் கவர் ஆர்டர் செய்தவருக்கு ஒரிஜினல் பாஸ்போர்ட்டை அனுப்பிய அமேசான் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் வயநாட்டின் கனியம்பேட்டா கிராமத்தில் வசித்து வருபவர் மிதுன் பாபு. இவர் சமீபத்தில் தான் வாங்கிய பாஸ்போர்ட்டை வைப்பதற்காக கவர் ஒன்றை அமேசான் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார்.

சில தினங்களுக்குப் பிறகு அமேசன் நிறுவனத்தில் இருந்து நவம்பர் 1-ம் தேதி மிதுன் பாபுவுக்கு ஒரு பார்சல் வந்தது. அந்தப் பார்சலைப் பிரித்து பார்த்த மிதுனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்தப் பார்சலில் பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக உண்மையான பாஸ்போர்ட் இருந்ததைக் கண்டு மிதுன் பாபு அதிர்ச்சி அடைந்தார்.
இந்திய அரசால் வழங்கப்படும் பாஸ்போர்ட் அமேசான் மூலம் எப்படி வந்தது என்பது தெரியாமல் அவர் குழம்பினார்.

இதுகுறித்து அமேசான் நிறுவன வாடிக்கையாளர் சேவைப் பிரிவைத் தொடர்பு கொண்டார். அங்கு முறையான பதில் அளிக்கப்படவில்லை.

இதனால் குழம்பிய மிதுன் பாபு அந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தார். அது திருச்சூரை சேர்ந்த முகமது சலீம் என்பவருடையது என்பதை கண்டுபிடித்தார். உடனே அதில் இருந்த முகவரியை தொடர்பு கொண்டு பாஸ்போர்ட் விவகாரம் குறித்து விசாரித்தார். அந்த பாஸ்போர்ட் முகமது சலீமின் ஒரிஜினல் பாஸ்போர்ட் என தெரிந்தது.

விசாரணையில், கடந்த சில நாட்களுக்கு முன் அமேசானில் பாஸ்போர்ட் கவர் வாங்கிய சலீம், கவர் பிடிக்காததால் அதை மீண்டும் திருப்பி அனுப்பிவிட்டார். அப்படி அனுப்புகையில் கவரில் வைத்த பாஸ்போர்ட்டை எடுக்க மறந்தது தெரிய வந்தது.

முகமது சலீம் திருப்பி அனுப்பிய பாஸ்போர்ட் கவரை சோதிக்காத அமேசான் நிறுவனத்தினர் மீண்டும் அந்த பாஸ்போர்ட் கவரை மிதுன் பாபுவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பாஸ்போர்ட் கவருக்கு பதிலாக, ஒரிஜினல் பாஸ்போர்ட்டை டெலிவரி செய்த அமேசான் நிறுவனத்தின் செயல் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News