செய்திகள்
பயங்கரவாதி

கூட்டமான இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி- உளவு அமைப்புகள் எச்சரிக்கை

Published On 2021-10-31 07:13 GMT   |   Update On 2021-10-31 07:13 GMT
மதக்கூட்டங்கள், கோவில்கள், அதிக மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்புகளை பலப்படுத்தும்படி இந்திய உளவுத்துறை அனைத்து மாநிலங்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லி:

பாகிஸ்தான் உளவு அமைப்பான ‘ஐ.எஸ்.ஐ.’ இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளை  தொடர்ந்து தூண்டிவிட்டு வருகிறது.

ஏற்கனவே டெல்லி, மும்பை, அகமதாபாத் மற்றும் காஷ்மீரின் பல பகுதிகளில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ. தூண்டுதல்தான் காரணம் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

சமீப காலமாக இந்தியாவில் அச்சத்தை உருவாக்கும் வகையில் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் பல்வேறு தீவிரவாத குழுக்களையும் தூண்டிவிட்டு வருகிறது.

சமீபத்தில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவன தீவிரவாத அமைப்புகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து பேசினார்கள். அப்போது இந்தியாவில் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்த வேண்டும் என்பதுடன் எந்தெந்த மாதிரி தாக்குதல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் திட்டம் வகுத்துக் கொடுத்தனர்.

இதற்கான ஆயுதங்கள், மற்ற உதவிகள் தயாராக வைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர்கள், அந்த அமைப்புகளிடம் தெரிவித்தனர். இதற்கு பிறகு காஷ்மீர் பகுதி எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து வருகிறது.

இந்த சதித்திட்டத்தை முன் கூட்டியே கண்டறிந்த இந்தியா உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டு எல்லை பகுதிகளில் கண்காணிப்பை அதிகப்படுத்தியது.

இதன் காரணமாக எல்லையில் ஊடுருவும் ஏராளமான பயங்கரவாதிகளை உளவுப்படையினர் கண்டறிந்து கொன்று குவித்து வருகிறார்கள்.



ஆனாலும் கூட சில பயங்கரவாதிகள் காஷ்மீரை தாண்டி இந்தியாவின் பல பகுதிகளிலும் ஊடுருவி இருக்கலாம் என கருதப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம்   டெல்லியில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவனை போலீசார் கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடத்தியபோது, நவராத்திரி மற்றும் ராம்லீலா விழாக்களின்போது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பதுங்கி இருந்ததாக கூறினான். விழாக் காலங்களில் தாக்குதல் நடத்துவது எங்களது திட்டமாகும் என்று தெரிவித்தான்.

இதேபோல கடந்த சில நாட்களில் இந்தியா முழுவதும் 6 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களில் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் உளவுத்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அவர்களும் பல்வேறு தகவல்களை கூறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.-க்கு தகவல் பரிமாற்றங்களை செய்த 2 பேரை பஞ்சாப் சிறப்புப் படை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒருவர் ராணுவ வீரர் ஆவார். அவர்கள் இந்தியாவில்  உள்ள சில முக்கிய இடங்கள் பற்றிய முழுமையான விவரங்களை  சேகரித்து ஐ.எஸ்.ஐ.-க்கு அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளை அனுப்ப வசதியாக இந்த தகவல்கள் பரிமாறப்பட்டு இருக்கின்றன.

சமீப காலத்தில் கைதான பயங்கரவாதிகள், பஞ்சாபில் கைது செய்யப்பட்ட இருவர் ஆகியோரிடம் இந்திய உளவுத் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் ஐ.எஸ்.ஐ. தகவல் பரிமாற்றம், பயங்கரவாதிகள் தகவல் பரிமாற்றம் போன்றவற்றையும் இந்திய உளவுத்துறை இடைமறித்து கேட்டது.

இதில் கிடைத்த தகவல்களின்படி ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனம் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துவதற்கு திட்டமிட்டு இருப்பது உறுதியாக தெரியவந்தது. குறிப்பாக திருவிழா நடக்கும் நேரத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடத்தை குறிவைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பது ஐ.எஸ்.ஐ.யின் திட்டமாகும். அந்த வகையில் நவராத்திரி விழா காலத்தில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டனர். ஆனால் அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு அமையவில்லை.

இதனால் வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு அவர்கள் பயங்கரவாதிகளை ஏவி விட்டு இருப்பது இந்திய உளவுத் துறைக்கு தெரிய வந்தது.

இந்த தாக்குதலை நடத்துவதற்கான பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், பண உதவி அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் இந்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

பயங்கரவாதிகள் குறிப்பாக  மதக்கூட்டங்கள், கோவில்கள், அதிக மக்கள் கூடும் இடங்கள், முக்கியமான பாலங்கள், ரெயில் தண்டவாளங்கள், மின்பகிர்மான நிலையங்கள், ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

எனவே இந்த இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளை பலப்படுத்தும்படி இந்திய உளவுத்துறை, அனைத்து மாநிலங்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளது. குறிப்பாக அரசு முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்களில் பாதுகாப்பு அதிகமாக இருக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர்.

இதை அடிப்படையாகக் கொண்டு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து கைது செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.



Tags:    

Similar News