செய்திகள்
ரன்தீப் சுர்ஜேவாலா

டெல்லி எல்லைகளை அடைத்ததற்காக மோடி மன்னிப்பு கேட்கவேண்டும்- காங்கிரஸ் வலியுறுத்தல்

Published On 2021-10-29 15:46 GMT   |   Update On 2021-10-29 15:46 GMT
போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்றும், சாலைகளை அடைப்பதற்கு உரிமை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
புதுடெல்லி:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26-ம் தேதி முதல் போராடி வரும் விவசாயிகள், குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தினார்கள். அந்த பேரணி கலவரத்தில் முடிந்ததால், டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை தடுக்க எல்லைகளில் சிமெண்ட் தடுப்புகள், கான்கிரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டன. 

தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் டெல்லி எல்லைகளில் உள்ள தடுப்புகள், பேரிகார்டுகளை போலீசார் அகற்றத் தொடங்கினர். போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்றும், சாலைகளை அடைப்பதற்கு உரிமை இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், சாலைகளை அடைத்ததற்கு போலீஸ்தான் பொறுப்பு என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தடுப்புகளை அகற்றும் பணி வேகமாக நடைபெறுகிறது. 



இந்த செய்தியை சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி மத்திய அரசையும் பிரதமர் மோடியும் கடுமையாக சாடி உள்ளது. 

சாலைகளை அடைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதற்காக நாட்டு மக்களிடமும், உச்ச நீதிமன்றத்திடமும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தினார். டெல்லியின் எல்லைகளை அடைத்தது விவசாயிகள் அல்ல, காவல்துறை என்பது இப்போது தெளிவாகிறது என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News