செய்திகள்
பெங்களூரு விதான சவுதா முன்பு ஏராளமானோர் திரண்டு கன்னட தாய் வாழ்த்து பாடல் பாடினர்.

பெங்களூரு: ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் கன்னட தாய் வாழ்த்து பாடி அசத்தல்

Published On 2021-10-29 02:46 GMT   |   Update On 2021-10-29 02:46 GMT
ராஜ்யோத்சவா தினத்தையொட்டி பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் கன்னட தாய் வாழ்த்து உள்பட 3 கன்னட பாடலை பாடி அசத்தினர்.
பெங்களூரு :

கர்நாடக மாநிலம் உதயமான தினத்தை கன்னட ராஜ்யோத்சவா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, வருகிற 1-ந் தேதி கன்னட ராஜ்யோத்சவா மாநிலம் முழுவதும் சிறப்பாக கொண்டாட கன்னட வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக "கன்னடத்துக்காக நாம்" என்ற புதிய விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக வேறு மொழியை கலந்து பேசாமல் கன்னடத்தில் மட்டுமே பேச வேண்டும் என்பதற்காக பெங்களூரு உள்பட கர்நாடக மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நேரத்தில் 5 லட்சம் பேர் கன்னட தாய் வாழ்த்து பாடல் உள்பட 3 கன்னட பாடல்களை பாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்கள், பெங்களூரு விதானசவுதா, கர்நாடக ஐகோர்ட்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

பெங்களூரு விதானசவுதாவில் நடந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் காகேரி, கன்னட வளர்ச்சி மற்றும் கலாசாரத்துறை மந்திரி சுனில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். விதானசவுதா முன்பகுதியில் உள்ள படிக்கட்டுகளில் மந்திரிகள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானவா்கள் வரிசையாக நின்றபடி கன்னட தாய் வாழ்த்து உள்பட மூன்று பாடலை பாடினார்கள்.

காலை 11 மணியளவில் இந்த நிகழ்ச்சி நடந்திருந்தது. உப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டார். பெங்களூரு விதானசவுதா, கர்நாடக ஐகோர்ட்டு, பிற அரசு அலுவலகங்களிலும், பெங்களூரு தவிர பிற மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் கன்னட தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள். அரசு பள்ளிகளிலும் கன்னட தாய் வாழ்த்து பாடல் பாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஒட்டு மொத்தமாக நேற்று ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் 5 லட்சம் பேர் கன்னட தாய் வாழ்த்து பாடலை பாடினார்கள்.

இதுகுறித்து மந்திரி சுனில்குமார் பேசுகையில், கர்நாடக மாநிலத்தின் பொறுப்புள்ள குடிமகனாக கன்னடத்திலேயே பேசுவேன், கன்னடத்திலேயே எழுதுவேன், நான் தினமும் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் கன்னட மொழி கலந்திருக்கும். கன்னட நாடு, கன்னட மொழியை பாதுகாக்க எனது உயிர் இருக்கும் வரை போராடுவேன். கர்நாடகத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் கன்னடத்தில் பேசுவதுடன், எழுதவும் செய்ய வேண்டும்.

பெங்களூரு விதானசவுதா படிக்கட்டுகளில் இருந்து மாநிலம் முழுவதும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரே நேரத்தில் கன்னட தாய் வாழ்த்து பாடலை லட்சக்கணக்கானோர் பாடி உள்ளனர். ஒட்டு மொத்தமாக 7 முதல் 8 லட்சம் பேர் கன்னட தாய் வாழ்த்து பாடலை பாடி உள்ளனர். ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளைகளுக்கு கன்னட புத்தகத்தை கொடுத்து தினமும் படிக்க வைக்க வேண்டும், என்றார்.

பின்னர் சபாநாயகர் காகேரி பேசும் போது, கன்னட வளர்ச்சி மற்றும் கலாச்சார துறை மந்திரியாக சுனில்குமார் பதவி ஏற்ற பின்பு, இந்த துறைக்கு புதிய சக்தி கொடுத்துள்ளார். அவர் மின்சார துறை மந்திரியாகவும் இருப்பதால், கர்நாடகத்திற்கே புதிய வெளிச்சத்தை கொடுத்திருக்கிறார். நாம் அனைவரும் கன்னட மொழியில் பேச வேண்டும், கன்னடத்திலேயே எழுத வேண்டும், என்றார்.

பெங்களூரு விதானசவுதாவில் நடந்த நிகழ்ச்சியின் போது கன்னட தாய் வாழ்த்து பாடலை பாடிய போது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கர்நாடகத்திற்கான கொடியை கையில் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News