செய்திகள்
பிரசாந்த் கிஷோர்

ராகுல் காந்தியின் பிரச்சினையே இதுதான்... அரசியல் அரங்கை அதிர வைத்த பிரசாந்த் கிஷோர் கருத்து

Published On 2021-10-28 16:30 GMT   |   Update On 2021-10-28 16:30 GMT
சுதந்திரத்துக்கு பின்னர் தொடக்க காலங்களில் இந்திய அரசியலில் 40 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் மையப் புள்ளியாக இருந்தது போல பாஜக நிலைத்து நிற்கும்.
புதுடெல்லி:

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங், ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்காக தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுத்த பிரசாந்த் கிஷோர், அவர்களை வெற்றி பெறவும் செய்தார்.

தற்போது கோவா மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூகங்களை வகுத்து வழங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதற்காக கோவா சென்ற அவர்,  செய்தியாளர் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசினார்.

அப்போது, இந்திய அரசியலின் மையப் புள்ளியாக பாஜக விளங்கும் என்றும், பாஜக வெற்றி பெற்றாலும் சரி தோல்வியடைந்தாலும் சரி, அடுத்த பல ஆண்டுகளுக்கு அந்த கட்சி இந்திய அரசியலின் மையப் புள்ளியாக இருக்கப் போகிறது என்றும் கூறினார்.

‘சுதந்திரத்துக்கு பின்னர் தொடக்க காலங்களில் இந்திய அரசியலில் 40 ஆண்டுகள் தொடர்ந்து காங்கிரஸ் மையப் புள்ளியாக இருந்தது போல பாஜக பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். தேசிய அளவில் 30 சதவீதத்துக்கு கூடுதலான வாக்கு வங்கியை பெற்ற பின்னர் பாஜக அவ்வளவு சுலபமாக சுருங்கிவிடாது. இதை உணர்ந்துகொள்ளாமல் இருப்பதுதான் ராகுல் காந்தியின் பிரச்சினை.

மக்கள் மோடியை அவ்வளவு சுலபமாக தூக்கி எறிந்து விடுவார்கள் என ராகுல் காந்தி கருதுகிறார். அப்படி நடக்கப்போவதில்லை. பிரதமர் மோடியின் பலம் குறித்து ஆராய்ந்து, புரிந்துகொண்டு, அதனை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் உங்களால் (ராகுல்) மோடிக்கு போட்டியை கூட கொடுக்க முடியாது’ என பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பாஜகவின் வலிமை  குறித்தும், ராகுல் காந்தியின் செயல்பாடுகள்  குறித்தும் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த இந்த கருத்து அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News