செய்திகள்
மழை

திருவனந்தபுரம், கொல்லம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Published On 2021-10-28 06:21 GMT   |   Update On 2021-10-28 08:38 GMT
கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 31-ந்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் சமீபத்தில் இடைவிடாமல் கொட்டிய மழையால் மாநிலத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சியளித்தது.

தொடர் மழையால் மாநிலத்தில் முக்கியமான அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மழை பாதிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த நிலையில் தென்மேற்கு அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.

இந்த புயல் சின்னம் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இது மேலும் தீவிரமடைந்து வருவதால் கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 31-ந்தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், வருகிற 31-ந்தேதி வரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், திருச்சூர், எர்ணாகுளம் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் இங்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. இதையடுத்து 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.



Tags:    

Similar News