செய்திகள்
யோகி ஆதித்யநாத்

பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி உ.பி. முதல்வருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய இளைஞர்கள்

Published On 2021-10-27 07:33 GMT   |   Update On 2021-10-27 09:11 GMT
பள்ளிகளில் காலியாக உள்ள 1,37,500 உதவி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு இளைஞர்கள் ரத்தத்தில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 2017-ம்  ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றியது. அப்போது, முதல் மந்திரியாக பதவியேற்ற யோகி ஆதித்யநாத் வேலைவாய்ப்பு உறுதி மற்றும் மாநிலத்தில் சிறந்த சமூக பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக உதவி ஆசிரியர்களுக்கான 1,37,500 பணியிடங்களை நிரப்பப்படவில்லை என்று பணிக்காக விண்ணப்பித்துள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள்  குற்றம்சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக இளைஞர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் லக்னோவில் உள்ள மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அலுவலகத்தில், மாநில அரசு தங்களுக்கு எதிராக ஆட்சேர்ப்பில் பாரபட்சம் காட்டுவதாகவும், பணியிடங்களை நிரப்ப தாழ்த்தப்பட்ட சமூகங்களை நிராகரித்துவிட்டு உயர் சாதி சமூகத்திற்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக கூறி போராட்டம் நடத்தினர்.

இதேபோல், கடந்த 21-ம் தேதி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது இளைஞர்கள் மீது தடியடி நடத்தியதுடன் போலீசார் சுமார் 61 பேரை  கைது செய்தனர்.



இதற்கிடையே பணி நியமனம் செய்யப்படவில்லை என்றால் தற்கொலை ஒன்றே எங்களுக்கு தீர்வு என்று ஜனாதிபதி மற்றும் ஆளுநருக்கு இளைஞர்கள் கடிதம் எழுதி இருந்தனர்.

இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் காலியாக உள்ள 1,37,500 உதவி ஆசிரியர்களுக்கான பணியிடங்களை உடனடியாக நிரப்பும்படி முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு சுமார் ஆயிரம் கடிதங்களை அனுப்பி வலியுறுத்தி உள்ளனர். இதில் சில இளைஞர்கள் கோரிக்கையை தங்களின் ரத்தத்தில் எழுதி அனுப்பி உள்ளனர்.


Tags:    

Similar News