செய்திகள்
மோட்டார் சைக்கிள் பயணம்

குழந்தைகளை ஏற்றி செல்லும்போது மோட்டார் சைக்கிளுக்கு வேக கட்டுப்பாடு- மத்திய அரசு புதிய யோசனை

Published On 2021-10-27 04:08 GMT   |   Update On 2021-10-27 04:08 GMT
குழந்தைகளை ஏற்றி செல்லும்போது மோட்டார் சைக்கிள்களை மணிக்கு 40 கி.மீ. வரையிலான வேகத்தில் இயக்க வேண்டும் என்று மத்திய அரசு புதிய யோசனையை முன்வைத்துள்ளது.
புதுடெல்லி:

மத்திய தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று ஒரு வரைவு அறிவிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

4 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மோட்டார் சைக்கிளின் பின்னால் வைத்து ஓட்டிச்செல்லும்போது, வாகனத்தை மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்குள் இயக்க வேண்டும். அந்த வேகத்தை தாண்டக்கூடாது.

அப்படி கூட்டிச்செல்லும்போது, குழந்தைக்கு ஹெல்மெட் அணிவித்து இருக்க வேண்டும். குழந்தையின் பாதுகாப்புக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.



குழந்தையை பாதுகாப்பு உபகரணங்கள் மூலம் வாகனத்தை ஓட்டுபவருடன் இணைத்திருக்க வேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள், எடை குறைவானதாகவும், எளிதில் சரிசெய்யக்கூடியதாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வரைவு அறிவிக்கை குறித்து பொதுமக்கள் தங்கள் யோசனைகளையும், ஆட்சேபனைகளையும் தெரிவிக்குமாறு தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

பொதுமக்களின் கருத்துகள் அடிப்படையில், இந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு அமலுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது.



Tags:    

Similar News