செய்திகள்
திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த அபிஷேக் பானர்ஜி

பாஜக என்ற வைரசை ஒழிக்கும் ஒரே தடுப்பூசி மம்தா பானர்ஜிதான் -அபிஷேக் பானர்ஜி தடாலடி பேச்சு

Published On 2021-10-25 13:30 GMT   |   Update On 2021-10-25 13:30 GMT
வங்காளதேச மதவாத வன்முறையால் ஏற்பட்ட அலையில் சவாரி செய்து இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சிப்பதாக அபிஷேக் பானர்ஜி விமர்சித்தார்.
தின்ஹட்டா:

மேற்கு வங்காளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆட்சியை பிடிக்கும் பாஜகவின் கனவு தகர்ந்தது. 

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் காலியாக உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 30ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளை கைப்பற்ற பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இரண்டு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. 

தின்ஹட்டாவில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் நம்பர்-2 என பேசப்படும் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி பிரசாரம் செய்தார். பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், பாஜகவை ‘வைரஸ்’ என கடுமையாக விமர்சனம் செய்தார். 

‘அக்டோபர் 30ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள 4 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். ஒட்டுமொத்த நாடே இடைத்தேர்தல் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறது. மம்தா பானர்ஜி போன்ற தலைவரை மக்கள் விரும்புகின்றனர். அதனால்தான் மம்தாவை வாழ்த்தி முழக்கமிடுகிறார்கள். கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் போன்று, பாஜக என்ற வைரசுக்கு எதிரான தடுப்பூசி மம்தா பானர்ஜி’ என அபிஷேக் பேசினார்.

வங்காளதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட மதவாத வன்முறையால்  ஏற்பட்ட அலையில் சவாரி செய்து, சாந்திபூர் மற்றும் தின்ஹட்டா இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக முயற்சிப்பதாகவும் அபிஷேக் பானர்ஜி விமர்சித்தார்.
Tags:    

Similar News