செய்திகள்
மழை

5 மாதங்களாக நீடித்த தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தது

Published On 2021-10-25 10:25 GMT   |   Update On 2021-10-25 10:25 GMT
பொதுவாக தென்மேற்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முற்றிலுமாக விலகிவிடும். அதன் பிறகு பருவக்காற்றுகள் திசை திரும்பி, வடகிழக்கு திசையில் பயணிக்கும்.
புதுடெல்லி:

நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்தததாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 5 மாதங்கள் வரை நீடித்த தென்மேற்கு பருவமழை, கடந்த மாதம் 6ம் தேதி முதல் விலகத் தொடங்கியது. பருவமழை முற்றிலும் முடிவுக்கு வருவதற்கு 20 நாட்கள் ஆகின. 

இந்த ஆண்டு, நாடு சராசரி மழைப்பொழிவு இருந்தது. இது நீண்ட கால சராசரி அளவாக 109 சதவீதம் இருந்தது. மழைப்பொழிவு செப்டம்பரில் கணிசமாக உயர்ந்து அக்டோபர் வரை தொடர்ந்தது. உத்தரகாண்ட், டெல்லி, கேரளா, ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம், சிக்கிம் மற்றும் மேகாலயா போன்ற பல மாநிலங்களில் கனமழை பெய்தது.

பொதுவாக, தென்மேற்கு பருவமழை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் முற்றிலுமாக விலகிவிடும், அதன் பிறகு பருவக்காற்றுகள் திசை திரும்பி,  வடகிழக்கு திசையில் பயணிக்கும். 

வடகிழக்கு பருவக் காற்று உருவாக உள்ளதால், வடகிழக்கு பருவமழை நாளை முதல் (செவ்வாய்க்கிழமை) தொடங்கலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. ஆனால், ஒரு நாள் முன்னதாக, இன்றே தென்னிந்தியாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது.

இந்த வார இறுதி வரை கேரளா, மாகே, தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, கேரளா, தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் நாளை வரை கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News