செய்திகள்
திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட 6 பேரை காணலாம்

திருப்பதியில் இருந்து சென்னைக்கு செம்மரம் கடத்திய 6 பேர் கைது

Published On 2021-10-25 09:33 GMT   |   Update On 2021-10-25 09:33 GMT
சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் சென்னைக்கு கடத்தி செல்ல முயன்ற 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
திருப்பதி:

திருப்பதி அருகே செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை டி.எஸ்.பி. முரளிதரன் தலைமையிலான போலீசார் திருப்பதி-சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வடமாலப்பேட்டை அஞ்சாரம்மா கோவில் அருகே 6 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை காரில் ஏற்றிக்கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் காரில் செம்மரங்களை ஏற்றிக்கொண்டிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது29), திருவள்ளூர் மாவட்டம் பாகசாலை கிராமத்தை சேர்ந்த சரவணன் (34), பள்ளிப்பட்டை சேர்ந்த ரமேஷ், சென்னை திருவேற்காட்டை சேர்ந்த ரமேஷ் (47), சஞ்சீவி (27), ராக்கி (29) மற்றும் ஸ்ரீஜித் (43) என்பது தெரிய வந்தது.

இவர்கள் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி காரில் சென்னைக்கு கடத்தி செல்ல முயன்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செம்மர கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 பைக், ஒரு வேன், காருடன் 11 செம்மரங்களை பறிமுதல் செய்து செம்மரக் கடத்தலில் முக்கிய புள்ளி யார்? சென்னையில் எந்த இடத்திற்கு செம்மரங்களை கடத்தி செல்கின்றனர்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News