செய்திகள்
ராகுல் காந்தி

பெட்ரோல் மீதான ‘வரிக் கொள்ளை’ அதிகரிப்பு -ராகுல் காந்தி கடும் விமர்சனம்

Published On 2021-10-24 14:31 GMT   |   Update On 2021-10-24 14:31 GMT
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,000 ரூபாயைத் தாண்டும்போது, மத்திய அரசு கொண்டாடுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
புதுடெல்லி:

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசு மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

அதில், பெட்ரோல் விலை மீதான வரிக் கொள்ளை அதிகரித்து வருவதாகவும், எங்காவது தேர்தல் நடந்தால் சிறிது ஓய்வு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  அத்துடன் #TaxExtortion என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

இதேபோல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய அரசை கடுமையாக சாடி உள்ளார். 

‘பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள், 100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டதை கொண்டாடுகின்றனர். அதேபோல் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து சதம் அடித்ததையும், இப்போது டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாடுவதில் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 1,000 ரூபாயைத் தாண்டும்போது, கொண்டாடுவதற்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்’ என ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
Tags:    

Similar News