செய்திகள்
மத்திய அரசு

2-வது டோஸ் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்துங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Published On 2021-10-19 19:27 GMT   |   Update On 2021-10-19 19:27 GMT
பல மாநிலங்களில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு ஏற்ற வகையில் போதுமான தடுப்பூசிகள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இதுவரையில் 99 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 100 கோடி டோஸ் என்ற இலக்கை நோக்கி இந்த தடுப்பூசி திட்டம் சென்று கொண்டிருக்கிறது.

இதையொட்டி மாநிலங்களுடனும், யூனியன் பிரதேசங்களுடனும் மத்திய அரசு காணொலிக்காட்சி வழியாக கலந்துரையாடி ஆய்வு செய்தது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கலந்து கொண்டு பேசும்போது, 100 கோடி டோஸ் தடுப்பூசி என்ற இலக்கை நாடு நெருங்கி இருப்பதை சுட்டிக்காட்டி, இதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். அதே நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பயனாளிகள் 2-வது டோஸ் தடுப்பூசியை இன்னும் பெறவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.



அதைத் தொடர்ந்து 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டன.

பல மாநிலங்களில், இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்கு ஏற்ற வகையில் போதுமான தடுப்பூசிகள் இருப்பதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இலக்கை அடைவதற்காக மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களும் இன்னும் கூடுதலான தடுப்பூசிகளை வினியோகிக்கும் நிலையில் மத்திய அரசு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் குறைவாக தடுப்பூசி போடப்பட்டுள்ள மாவட்டங்களை கண்டறிந்து,. உள்ளூர் சவால்களை கவனத்தில் கொண்டு, தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

உள்துறை அமைச்சகம், குடிவரவு அமைப்பு, சிவில் விமான போக்குவரத்து துறை, வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட தொடர்புடையவர்களை கலந்து ஆலோசித்து சர்வதேச பயணங்களுக்கான நிலையான வழிகாட்டும் நெறிமுறைகளை மதிப்பாய்வு செய்வதாகவும், இதில் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்கள் தங்கள் கருத்துகளை அனுப்புமாறு கேட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சக தகவல்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News