செய்திகள்
கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

இந்தியாவில் கொரோனா நிலவரம்- 21 மாநிலங்களில் உயிரிழப்பு இல்லை

Published On 2021-10-19 05:07 GMT   |   Update On 2021-10-19 06:39 GMT
புதிய பாதிப்பை விட கொரோனா பிடியில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாக இருந்து வரும் நிலையில் நேற்று 19,470 பேர் நலம் பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 13,058 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இது கடந்த 231 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 94 ஆயிரத்து 373 ஆக உயர்ந்தது. நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,676, மகாராஷ்டிராவில் 1,485, தமிழ்நாட்டில் 1,192, மிசோரத்தில் 953, மேற்கு வங்கத்தில் 690 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று பாதிப்பு 500-க்கும் குறைவாக இருந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 60, மகாராஷ்டிராவில் 27 பேர் உள்பட நேற்று 164 பேர் இறந்துள்ளனர்.

உத்தரபிரதேசம், டெல்லி உள்பட நாடுமுழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நேற்று உயிரிழப்புகள் இல்லை. மொத்த பலி எண்ணிக்கை 4,52,454 ஆக அதிகரித்தது.

புதிய பாதிப்பை விட கொரோனா பிடியில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகமாக இருந்து வரும் நிலையில் நேற்று 19,470 பேர் நலம் பெற்றுள்ளனர்.

இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 58 ஆயிரத்து 801 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,83,118 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 227 நாட்களில் இல்லாத அளவில் குறைவாகும்.



நாடு முழுவதும் நேற்று 87,41,160 தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 98 கோடியே 67 லட்சமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, நேற்று 11,81,314 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தம் 59.31 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News