செய்திகள்
டிகே சிவக்குமார்

எடியூரப்பாவின் கண்ணீர் அலையில் பா.ஜனதா காணாமல் போய் விடும்: டி.கே.சிவக்குமார்

Published On 2021-10-19 03:00 GMT   |   Update On 2021-10-19 03:00 GMT
பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். அதன்படி கடந்த 7 ஆண்டுகளில் 14 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும்.
பெங்களூரு :

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ஹாவேரி மாவட்டம் ஹனகல் தொகுதியில் நேற்று தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அதில் அவர் பேசியதாவது:-

சித்தராமையாவை சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோற்கடித்து கே.ஆர்.எஸ். அணையில் தூக்கி எறிந்துவிட்டனர் என்று பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். தென்இந்தியாவில் முதல் முறையாக கர்நாடகத்தில் பா.ஜனதாவை ஆட்சியில் அமர்த்திய எடியூரப்பாவை நீங்கள் எப்படி நடத்தினீர்கள்?. அவர் பதவியை அழுது கொண்டே ராஜினாமா செய்தார்.

எடியூரப்பாவின் கண்ணீர் பா.ஜனதாவை சும்மா விடாது. அவரது கண்ணீர் அலையில் பா.ஜனதா காணாமல் போய் விடும். மத்தியிலும், மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி நடப்பது ஒரு சாபக்கேடு. கர்நாடகத்தை சேர்ந்தவர் தான் மத்திய நிலக்கரித்துறை மந்திரியாக உள்ளார். ஆனால் கர்நாடகத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஹனகல் தொகுதியில் சாலைகள் கால்வாய் உள்ளது. இது தான் பசவராஜ் பொம்மை மேற்கொண்ட வளர்ச்சியா?.

கொரோனா பரவல் நேரத்தில் ரூ.1,800 கோடிக்கு நிதி உதவி தொகுப்பு திட்டத்தை எடியூரப்பா அறிவித்தார். அதன் பலன் யாருக்காவது கிடைத்ததா?. உதாசி எம்.எல்.சி. பா.ஜனதாவின் மூத்த தலைவர். அவருக்கு மந்திரி பதவி வழங்கவில்லை. அந்த மனவேதனையால் தான் அவர் இறந்தார். ஒருவர் இறந்த பிறகு புகழ்வது முக்கியமல்ல. அவர் இருந்தபோது அவரை எப்படி நடத்தினார்கள் என்பது தான் முக்கியம்.

பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக கூறினார். அதன்படி கடந்த 7 ஆண்டுகளில் 14 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். அதற்கு மாறாக 4 கோடி வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளன. இந்த சூழ்நிலையில் வாக்காளர்கள் எதற்காக பா.ஜனதாவுக்கு ஓட்டுப்போட வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.
Tags:    

Similar News