செய்திகள்
திருச்சூரில் சாலையை மூழ்கடித்து செல்லும் வெள்ளம்

அணைகளில் உபரி நீர் திறப்பால் மீண்டும் வெள்ளக்காடான கேரளா- பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு

Published On 2021-10-18 07:24 GMT   |   Update On 2021-10-18 08:45 GMT
கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல் மந்திரி பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
திருவனந்தபுரம்:

அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 நாட்களாக கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுபெற்றதால் மழையும் இடைவிடாது பெய்தது. இதில் கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கிருந்த பல வீடுகள் மண்ணில் புதைந்தது. பல வீடுகள் இடிந்து விழுந்தன.

மழையின் காரணமாக காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாகவும் மலை கிராமங்களில் இருந்த பல வீடுகள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன.

நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதில் கோட்டயத்தில் 14 பேரும், இடுக்கியில் 10 பேரும், திருவனந்தபுரம், பத்தினம்திட்டையில் 3 பேரும் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு படையினர் முகாமிட்டு மண்ணில் புதைந்தவர்களை மீட்டு வருகிறார்கள். நேற்று மழை சற்று குறைந்திருந்தது. இதனால் மீட்பு பணி வேகமாக நடந்தது. இன்று காலையிலும் மண்ணில் சரிந்த வீடுகளில் யாராவது சிக்கி உள்ளார்களா? என்பதை கண்டறியும் பணி நடந்தது.

இதற்கிடையே கேரளா முழுவதும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இடுக்கி, மலம்புழா, பம்பை, நெய்யாற்றின்கரை அணைகளில் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

பத்தினம்திட்டாவில் உள்ள காக்கி அணை இன்று பிற்பகல் திறக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுபோல பம்பா அணையின் நீர்மட்டம் நேற்றிரவு 983.30 மீட்டராக இருந்தது. இன்று காலையிலும் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது.

இடுக்கி அணையின் நீர்மட்டம் நேற்று நள்ளிரவு 2396.46 அடியாக இருந்தது. இன்று காலையிலும் அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்தபடி இருந்தது.

அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அணைகளுக்கு வரும் உபரி நீரை திறந்துவிடப்பட்டு வருகிறது. இன்று பிற்பகலிலும் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஏற்கனவே மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் அணைகளின் உபரி நீரும் திறந்து விடப்பட்டால் ஆறுகளில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.

அணைகள் மற்றும் காட்டாறுகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கரைகளை உடைத்து ஊருக்குள்ளும் பாய்கிறது. இதனால் கேரளாவின் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.



பயிர் நிலங்கள், ரப்பர் தோட்டங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. கோட்டயம், குற்றிக்கல், இடுக்கி, பத்தினம்திட்டா பகுதிகளில் ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி கிடக்கின்றன. இதனால் கேரளாவே வெள்ளத்தில் மிதக்கிறது.

கேரளாவில் பெரு வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்பு படையின் கூடுதல் குழுக்கள் கேரளா சென்றுள்ளது. அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுபோல கடற்படை, விமான படை மற்றும் ராணுவ வீரர்கள் என முப்படையினரும் இணைந்து மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து முதல் மந்திரி பினராயி விஜயனிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பின்னர் கேரளாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு தரப்பில் இருந்து உடனடியாக செய்து தரப்படும் எனவும் கூறினார்.

மேலும் அவர் கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவித்தார்.



Tags:    

Similar News