செய்திகள்
சம்பு நம்பூதிரி - என் பரமேஸ்வரன் நம்பூதிரி

சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தியாக பரமேஸ்வரன் நம்பூதிரி தேர்வு

Published On 2021-10-18 03:15 GMT   |   Update On 2021-10-18 03:15 GMT
மாளிகப்புரம் மேல் சாந்தியாக குலுக்கல் முறையில் கோழிக்கோட்டை சேர்ந்த சம்பு நம்பூதிரி தேர்வானார்.
திருவனந்தபுரம்:

ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலையில் திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு சபரிமலை சிறப்பு கமிஷனர் எம்.மனோஜ் தலைமையில், தந்திரி முன்னிலையில் புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான குலுக்கல் நடைபெற்றது. நேர்காணல் மூலம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட 9 பேரின் பெயர்கள் ஒரு வெள்ளி குடத்திலும், மேல்சாந்தி என எழுதப்பட்ட ஒரு துண்டு சீட்டுடன் ஒன்றும், எழுதாத 8 துண்டு சீட்டுகள் மற்றொரு வெள்ளி குடத்திலும் போடப்பட்டது.



பின்னர் குலுக்கல் மூலம் துண்டு சீட்டுகள் குடங்களில் இருந்து ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டது. 4-வதாக எடுக்கப்பட்ட சீட்டில் என். பரமேஸ்வரன் நம்பூதிரி பெயர் எழுதிய சீட்டும் மற்றொரு குடத்தில் எடுக்கப்பட்ட சீட்டில் மேல் சாந்தி என எழுதப்பட்ட துண்டு சீட்டும் வந்தது. அதைத்தொடர்ந்து மாவேலிக்கரையை சேர்ந்த என். பரமேஸ்வரன் நம்பூதிரி சபரிமலை மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதே போல் மாளிகப்புரம் மேல் சாந்தியாக குலுக்கல் முறையில் கோழிக்கோட்டை சேர்ந்த சம்பு நம்பூதிரி தேர்வானார்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட இரு மேல் சாந்திகளும் அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதி முதல் ஒரு ஆண்டு பணியாற்றுவார்கள். இதில் தேவஸ்தான தலைவர் வாசு, உறுப்பினர்கள் ரவி, தங்கப்பன், தேவஸ்தான கமிஷனர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



Tags:    

Similar News