செய்திகள்
ராகுல் காந்தி, சோனியா காந்தி

ராகுல்காந்தி முன்கூட்டியே காங்கிரஸ் தலைவர் ஆகிறார்

Published On 2021-10-17 17:30 GMT   |   Update On 2021-10-17 17:30 GMT
காரிய கமிட்டி கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தலைவர்களும் ராகுல்காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
புதுடெல்லி:

கடந்த 2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை அடுத்து கட்சியின் தேசிய தலைவராக இருந்த ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஏதோ ஆவேசத்தில் அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார், மீண்டும் தலைவர் பதவிக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர் மீண்டும் தலைவர் பதவிக்கு வர மறுத்துவிட்டார். இதன் காரணமாக சோனியா காந்தியை இடைக்கால தலைவராக நியமித்தனர்.

நிரந்தர தலைவர் இல்லாததால் கட்சியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. கட்சியின் நிலைமை தொடர்ந்து தொய்வடைந்து வந்தது.

இந்த நிலையில் 23 தலைவர்கள், கட்சியில் நிரந்தர தலைவர் இல்லாததை விமர்சித்து கடிதம் எழுதினார்கள்.



காங்கிரசில் முக்கிய முடிவுகளை எடுக்கும் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அப்போது நிரந்தர தலைவரை தேர்வு செய்வது குறித்து விவாதங்கள் வந்தன.

கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தலைவர்களும் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அப்போது ராகுல் காந்தி, ‘‘நான் மீண்டும் தலைவர் பதவியை ஏற்பது தொடர்பாக பரிசீலனை செய்கிறேன்’’ என்று கூறினார்.

இதுவரை எத்தனையோ தடவை மீண்டும் தலைவராகும்படி ராகுல்காந்தியை வற்புறுத்தியபோதிலும் அதை அவர் கண்டுகொள்ளவில்லை. மழுப்பலாக பதில் அளித்து சென்றுவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

எனவே அவர் தலைவர் பதவியை ஏற்க சம்மதிப்பாரா? இல்லையா? என்ற கேள்விக்குறி நீடித்து வந்தது.

ஆனால் நேற்று, முதல் முறையாக அவர் மீண்டும் தலைவர் பதவியை ஏற்க சம்மதம் என்பதுபோல கருத்து கூறி இருக்கிறார். அதன் அடிப்படையில்தான் அவர் பரிசீலிக்கிறேன் என்று தெரிவித்தார்.

எனவே ராகுல்காந்தியை மீண்டும் தலைவராக்க காங்கிரஸ் பணிகளை தொடங்கி உள்ளது. முறைப்படி தலைவராக அவரை தேர்வு செய்வதற்காக அடிமட்டத்தில் இருந்து தேர்தல் நடத்தி பின்னர் ராகுல்காந்தியை தேசிய தலைவராக தேர்வு செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள்.

தேர்தல் பணிகள் அடுத்த மாதம் 1-ந் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால் இந்த பணிகள் எல்லாம் முடிந்து செப்டம்பர் 20-ந்தேதி வாக்கில்தான் தேசிய தலைவரை தேர்வு செய்ய உள்ளனர்.

இதற்கு ஒரு ஆண்டு காலம் இருக்கிறது. தற்போது தலைவராக உள்ள சோனியா காந்திக்கு 74 வயதாகிறது. அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகின்றன. இடையில் சில ஆண்டுகள் ராகுல்காந்தி தலைவராக இருந்தாலும்கூட நீண்ட காலமாக சோனியாவே காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ளார்.

நரசிம்மராவ் ஆட்சி முடிந்ததற்கு பிறகு காங்கிரஸ் தலைவராக சீத்தாராம்கேசரி தேர்வு செய்யப்பட்டார். அவர் சோனியாவுக்காக காங்கிரஸ் தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தார். அதன்படி 1998-ம் ஆண்டு சோனியா காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

நீண்ட காலமாக அவர் தலைவராக இருக்கும் நிலையில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையாக செயல்படாத அளவுக்கு அவருடைய உடல்நிலை பாதிப்புகள் உள்ளன.

இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஒரு ஆண்டு காலத்துக்கு சோனியா காந்தி தலைவராக நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ராகுல் காந்தி தலைவராக சம்மதம் தெரிவித்து இருப்பதால் தேர்தல் முடிவதற்கு முன்பாக முன்கூட்டியே ராகுல்காந்தி தலைவர் பதவியை ஏற்க வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

அதாவது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவர் தலைவராக நியமனம் செய்யப்படுவார். பின்னர் கட்சியில் முறைப்படி தேர்தல் நடக்கும்போது அதில் அவர் தலைவராக தேர்வு ஆவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒருவேளை அவர் முன்கூட்டியே பதவி ஏற்க சம்மதிக்கவில்லை என்றால், கட்சி தேர்தல் முழுமையாக முடிந்து ஒரு ஆண்டு கழித்தே அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

இதையும் படியுங்கள்... நாம் ஒன்றாக வேண்டும்- அ.தி.மு.க. வென்றாக வேண்டும்: சசிகலா பரபரப்பு பேச்சு
Tags:    

Similar News