செய்திகள்
பாஜக

உத்தரபிரதேசத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கிறது- கருத்துக்கணிப்பில் தகவல்

Published On 2021-10-09 08:52 GMT   |   Update On 2021-10-09 08:52 GMT
மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜனதா கட்சிக்கும் கடும் போட்டி ஏற்பட்டு இருப்பது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
புதுடெல்லி:

உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் 5 மாநிலங்களிலும் எந்தெந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று சி-வோட்டர் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இன்று அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியானது.

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களிலும் பா.ஜனதாக கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அதிக செல்வாக்கு பெற்று இருப்பதால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்படவே வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் இடையே மோதல்கள் இருப்பதால் அந்த கட்சிக்கு பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடும் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 403 சட்டசபை தொகுதிகளில் சுமார் 250 இடங்கள் வரை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த கட்சிக்கு 41.3 சதவீத வாக்குகள் கிடைக்கும்.

அகிலேஷ்யாதவின் சமாஜ்வாடி கட்சிக்கு 130 முதல் 138 இடங்களும், மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சிக்கு 15 முதல் 19 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 7 இடங்களும் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 6 சதவீத வாக்கு வங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் உள்கட்சி சண்டை காரணமாக அந்த கட்சி செல்வாக்கை இழந்துள்ளது. 117 இடங்களை கொண்ட பஞ்சாபில் ஆம் ஆத்மி 49 முதல் 57 இடங்களை பிடிக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 30 முதல் 47 இடங்களுக்கு, அகாலிதளம் கட்சிக்கு 17 முதல் 27 இடங்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பா.ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது.

நல்ல செல்வாக்குடன் பஞ்சாபில் இருந்த காங்கிரஸ் சித்து வருகை காரணமாக சீர்குலைந்து தோல்வியை சந்திக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. பா.ஜனதாவுக்கு 45 சதவீத வாக்குகளும், காங்கிரசுக்கு 34 சதவீத வாக்குகளும், ஆம் ஆத்மி கட்சிக்கு 15 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் பா.ஜனதா கட்சி 24 முதல் 28 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 1 முதல் 5 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 3 முதல் 7 இடங்களும், சுயேட்சைகள் 8 இடங்கள் வரை வெற்றி பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜனதா கட்சிக்கும் கடும் போட்டி ஏற்பட்டு இருப்பது கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கு 21 முதல் 25 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 15 முதல் 22 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 இடங்கள் தேவை என்பதால் சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகள் ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் நாகா மக்கள் முன்னணி கட்சிக்கு திடீர் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

Tags:    

Similar News