செய்திகள்
பெண்

ஆன்லைன் வகுப்பை கவனிக்காத குழந்தைக்கு சூடு வைத்த தாய்

Published On 2021-10-08 05:42 GMT   |   Update On 2021-10-08 05:42 GMT
ஆன்லைன் வகுப்பை கவனிக்கவில்லை என தனது 6 வயது குழந்தைக்கு சூடு வைத்த தாய் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உடலில் பல்வேறு இடங்களில் தீக்காயங்களுடன் 6 வயது குழந்தை சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்டது.

குழந்தையின் கால் மூட்டின் கீழ்ப்பகுதிகள், அந்தரங்க உறுப்புகள் மற்றும் முகம் உள்ளிட்ட பகுதிகளில் கரண்டியால் சூடு வைக்கப்பட்டு இருந்தது.

குழந்தைக்கு முதல் உதவி மற்றும் சிகிச்சை அளித்த  டாக்டர்கள் இதுகுறித்து குமாரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கும் குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக விரைந்து வந்த குமாரமங்கலம் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் உடனடியாக  விசாரணையை தொடங்கினர். குழந்தைகள் நல அதிகாரிகள் குழந்தைக்கு கவுன்சிலிங் அளித்து பேசினர்.  அப்போது அந்த குழந்தை, தன் உடலில் தாயார் கரண்டியால் சூடு வைத்தது குறித்து மழலை குரலில் கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் தாயிடம் விசாரணை செய்தனர்.



அதில், குழந்தைக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் கற்பிக்கப்பட்டது.  ஆனால் குழந்தை சரியாக அதை கவனிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த  தாய் குழந்தையை கடுமையாக தாக்கியுள்ளார். பின்னர் தீயில் பழுக்க காய்ச்சிய கரண்டியால் குழந்தையின் உடல் முழுவதும் சூடு போட்டுள்ளார். இதனால் குழந்தை அலறி துடித்தது.

குழந்தையை அக்கம்பக்கத்தினர் மற்றும் குழந்தையின் தாய்மாமன் ஆகியோர் மீட்டு குமாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தது தெரியவந்தது. தற்போது குழந்தை, குழந்தைகள் நல அதிகாரிகள் பொறுப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

குழந்தையின் தாய் மாமன் அளித்த புகாரின் பேரில் தொடர்ந்து தாயிடம் விசாரணை நடந்து வருகிறது.  

அந்த பெண்ணை அவரது கணவன் கைவிட்டு சென்றதும் அதில் இருந்து அடிக்கடி குழந்தையை மோசமான முறையில் தாக்கி வருவதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.

அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News