செய்திகள்
ப சிதம்பரம்

பிரியங்கா கைது முற்றிலும் சட்டவிரோதம்: ப.சிதம்பரம் கண்டனம்

Published On 2021-10-06 02:20 GMT   |   Update On 2021-10-06 02:20 GMT
சூரிய அஸ்தமனத்துக்கு பிறகோ, சூரிய உதயத்துக்கு முன்போ எந்த பெண்ணையும் கைது செய்யக்கூடாது. எனவே, இது சட்டவிரோதம். அவர் ஒரு ஆண் போலீஸ் அதிகாரி மூலம் கைது செய்யப்பட்டதும் சட்டவிரோதம்.
புதுடெல்லி :

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கைது செய்யப்பட்டதற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரியங்கா, 4-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். சூரிய அஸ்தமனத்துக்கு பிறகோ, சூரிய உதயத்துக்கு முன்போ எந்த பெண்ணையும் கைது செய்யக்கூடாது. எனவே, இது சட்டவிரோதம். அவர் ஒரு ஆண் போலீஸ் அதிகாரி மூலம் கைது செய்யப்பட்டதும் சட்டவிரோதம்.

கைது வாரண்டு அவரிடம் அளிக்கப்படவில்லை. அவரது கையெழுத்து பெறப்படவில்லை என்பதும் சட்டவிரோதம். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 151-வது பிரிவின்கீழ் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

அந்த பிரிவின் கீழ் கைதானவரை வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் மாஜிஸ்திரேட் உத்தரவு இல்லாமல் 24 மணி நேரத்துக்கு மேல் காவலில் வைக்கக்கூடாது. ஆனால், மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்படாமல், 30 மணி நேரமாக பிரியங்கா சிறை வைக்கப்பட்டுள்ளார். மொத்தத்தில் இது முற்றிலும் சட்டவிரோதம்.

சந்தர்ப்ப சூழ்நிலைகளை பார்க்கும்போது, உத்தரபிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சியே இல்லை என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது. அங்கு சட்டம்-ஒழுங்கு என்பது முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சட்டம், அவரது உத்தரவு என்று ஆகிவிட்டது. அவரது சட்டத்தையும், உத்தரவையும் போலீசார் நிறைவேற்றியதுபோல் தோன்றுகிறது. இது வெட்கக்கேடானது.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
Tags:    

Similar News