செய்திகள்
காங்கிரஸ்

காங்கிரஸ் காரிய கமிட்டி கூடுகிறது- எதிர்ப்பாளர்கள் கோரிக்கையை சோனியா ஏற்றார்

Published On 2021-10-01 06:41 GMT   |   Update On 2021-10-01 06:41 GMT
பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் காங்கிரசில் இருந்து விலகுவதை தடுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர்.
புதுடெல்லி:

பஞ்சாப் மாநிலத்தில் அம்ரீந்தர்சிங் தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ்ஆட்சி மீது ராகுல் அதிருப்தி அடைந்தார்.

இதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமனம் செய்யப்பட்டார். அன்று முதல் பஞ்சாப் காங்கிரசில் பிரச்சனை தொடங்கியது. முதல்-மந்திரியாக இருந்த அம்ரீந்தர்சிங், சித்துவை ஏற்றுக்கொள்ளவில்லை.

சித்துவை திருப்திபடுத்துவதற்காக ராகுல், பிரியங்கா இருவரும் சில அதிரடி முடிவுகளை எடுத்தனர். அதன்படி முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங்கை நீக்கி விட்டு புதிய முதல்-மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி நியமனம் செய்யப்பட்டார். இதனால் அம்ரீந்தர்சிங்கும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர்.

காங்கிரசில் இருந்து விலகப்போவதாக அறிவித்து உள்ள அம்ரீந்தர்சிங் சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அம்ரீந்தர்சிங்கின் இந்த நடவடிக்கை காரணமாக பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சி கடும் பின்னடைவை சந்தித்து உள்ளது. பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் உள்கட்சியில் ஏற்பட்டுள்ள மோதல்கள் காங்கிரசை பலவீனப்படுத்துவதாக அமைந்து உள்ளன.

இதற்கிடையே புதிய முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னிக்கும், சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அமைச்சரவை நியமனம், அதிகாரிகள் நியமனத்தில் இருவரும் கருத்து வேறுபாடுகளுடன் உள்ளனர். தன்னை கலந்து ஆலோசிக்காததால் கோபமடைந்த சித்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

அவரை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்துள்ளனர். பஞ்சாப் மாநில காங்கிரசில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சனைகளுக்கு காங்கிரஸ் மேலிடம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில்சிபல் கருத்து தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் தொண்டர்கள் கபில்சிபல் வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.

கபில்சிபல் வீட்டின் முன்பு காங்கிரசார் போராட்டம் நடத்தியதற்கு ஜி-23 குழு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். சோனியா, ராகுல் தலைமைக்கு எதிராக ஜி-23 காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இந்த குழுவில் குலாம்நபி ஆசாத், கபில்சிபல், சசிதரூர், மணீஷ் திவாரி, வீரப்ப மொய்லி, பிரித்திவி ராஜ் சவான், பூவிந்தர்சிங் ஹுடா ஆகிய மூத்த தலைவர்கள் இடம் பெற்று உள்ளனர்.



கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் இவர்கள் அடிக்கடி சோனியாவுக்கு கடிதம் எழுதி தங்களது எதிர்ப்பை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது பஞ்சாபில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு உடனே தீர்வு காண காங்கிரஸ் செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும் இவர்கள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

ஜி-23 குழு தலைவர்களின் கோரிக்கையை முதலில் சோனியா, ராகுல், பிரியங்கா மூவரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் ஜி-23 தலைவர்களின் கருத்துக்கு கடந்த 2 நாட்களாக ஆதரவு அதிகரித்து உள்ளது. குறிப்பாக ப.சிதம்பரம் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் கபில்சிபலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இதனால் வேறு வழியின்றி எதிர்ப்பாளர்களின் கோரிக்கைக்கு சோனியா பணிந்து உள்ளார்.

காங்கிரஸ் காரிய கமிட்டி (செயற்குழு) கூட்டம் விரைவில் கூட்டப்படும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தெரிவித்தார். அவர் கூறுகையில், “சிம்லாவுக்கு புறப்படும் முன்பே காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று சோனியா எங்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். எனவே விரைவில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூடும். அப்போது அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும்” என்றார்.

ஆனால் காங்கிரஸ் காரிய கமிட்டி வரும் நாட்களில் எந்த தேதியில், எந்த நேரத்தில் கூட்டப்படும் என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. கபில்சிபல் சமீபத்தில் பேட்டி அளிக்கும் போது காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாததால் யார் இறுதி முடிவு எடுப்பது என்பதில் கேள்விக்குறி நீடிப்பதாக கூறி இருந்தார்.

இதை வலியுறுத்தி ஜி-23 தலைவர்களில் சிலர் சோனியாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இவை அனைத்துக்கும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்தநிலையில் பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங் காங்கிரசில் இருந்து விலகுவதை தடுக்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் சிலர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் அம்ரீந் தர்சிங்குடன் தொடர்ந்து பேசி வருகிறார்கள். ஆனால் அம்ரீந்தர்சிங்கின் மனதில் மாற்றம் ஏற்படவில்லை.

அமித்ஷாவை டெல்லியில் நேற்று முன்தினம் சந்தித்த அம்ரீந்தர்சிங் நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலை சந்தித்து பேசினார். பஞ்சாப் மாநில எல்லை பாதுகாப்பு குறித்து அஜித்தோவலுடன் பேசியதாக அம்ரீந்தர்சிங் தெரிவித்தார்.

ஆனால் அம்ரீந்தர்சிங்- அஜித் தோவல் இருவரும் சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடவே சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே பஞ்சாப் மாநில அரசியலில் அம்ரீந்தர்சிங்கின் முடிவுகளை பொறுத்து அடுத்தடுத்து அதிரடி மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags:    

Similar News