செய்திகள்
சிவ்ராஜ்சிங்

காங்கிரசை அழிக்க ராகுல்காந்தியே போதும் - மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங்

Published On 2021-09-30 08:16 GMT   |   Update On 2021-09-30 09:05 GMT
பஞ்சாப் மாநிலம் உறுதியற்ற தன்மை என்ற தீயில் வீசப்பட்டு இருக்கிறது என மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் கூறியுள்ளார்.

போபால்:

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்-மந்திரியாக இருந்த கேப்டன் அம்ரீந்தர்சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத்சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதில் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்-மந்திரி பதவியில் இருந்து அம்ரீந்தர் சிங் விலகினார். இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நவ்ஜோத்சிங் சித்து திடீரென்று விலகினார். இதனால் பஞ்சாப் மாநில அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிலும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் பஞ்சாப் மாநில விவகாரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியை மத்திய பிரதேச மாநில பா.ஜனதா முதல்-மந்திரி சிவ்ராஜ்சிங் சவுகான் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.


சிவ்ராஜ் சவுகான் பிரித்விபூர் சட்டசபை இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியை ராகுல் காந்தி மூழ்கடித்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தில் நிலையான ஆட்சி இருந்தது. முதல்-மந்திரியாக அம்ரீந்தர் சிங் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். அவரை ராகுல்காந்தி பதவியில் இருந்து நீக்கி விட்டு சித்து வேண்டுகோளை ஏற்று புதிய முதல்-மந்திரியாக சரண்ஜித் சிங் சன்னியை நியமித்தார். இப்போது சித்துவும் மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டார். அங்கிருந்த நிலையான அரசு அகற்றப்பட்டு இருக்கிறது. இதனால் நாடு ஆபத்தில் தள்ளப்பட்டு இருக்கிறது.

பஞ்சாப் மாநிலம் உறுதியற்ற தன்மை என்ற தீயில் வீசப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தி எவ்வளவு நாள் இருக்கிறாரோ அதுவரை நாம் எதுவும் செய்ய வேண்டாம். அவரே பார்த்துக் கொள்வார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...தலைமை மீது விமர்சனம்: கபில்சிபில் வீட்டு முன்பு காங்கிரசார் போராட்டம்

Tags:    

Similar News