செய்திகள்
ராகுல் காந்தி

ராகுல் காந்தி கேரளாவில் சுற்றுப்பயணம்: பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பு

Published On 2021-09-30 02:57 GMT   |   Update On 2021-09-30 02:57 GMT
இந்திய மக்கள் இடையேயான உறவுகளை பிரதமர் மோடி உடைக்கும்போது, எனது பணி, கடமை, உறுதிப்பாடு அனைத்தும் அந்த உறவுப்பாலங்களை சரிசெய்வதே ஆகும்.
மலப்புரம் :

காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். எனவே தனது தொகுதி மக்களை பார்ப்பதற்காக அடிக்கடி அவர் கேரளா வந்து செல்கிறார்.

அந்தவகையில் ஒருநாள் சுற்றுப்பயணமாக நேற்று அவர் கேரளா வந்தார். இதில் தனது தொகுதியான வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அத்துடன் மலப்புரத்தில் டயாலிசிஸ் மையம் ஒன்றையும் அவர் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியா வெறும் ஒரு புவியியல் சார்ந்த பிராந்தியம் அல்ல. இங்கு மக்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு இடையே நல்ல உறவு நீடிக்கிறது.

இங்கு வாழும் மக்களுடனான உறவுதான் இந்தியா என்று நான் நம்புகிறேன். இந்தியா என்பது கலாசாரம், சாதி, மொழி மற்றும் மதம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு. இது இந்து, முஸ்லிம், சீக்கியர்கள், திராவிட, மராத்தி, இந்தி, தெலுங்கு மலையாளம் ஆகியவற்றுக்கு இடையேயான உறவு. உங்கள் பாரம்பரியம், மொழி, கலாசாரம், நம்பிக்கைகள் மற்றும் தேவைகளை அறிய நான் இங்கு வந்துள்ளேன்.

மோடியுடன் என்னுடைய பிரச்சினை என்னவென்றால், அவர் இந்த உறவுகளை முறித்து வருகிறார். அப்படி அவர் இந்திய மக்களுக்கு இடையேயான உறவுகளை முறித்தால், அவர் இந்தியாவின் ஐடியாவையே நொறுக்கி விடுவார். அதனால்தான் நான் அவரை எதிர்க்கிறேன்.

இந்திய மக்கள் இடையேயான உறவுகளை அவர் உடைக்கும்போது, எனது பணி, கடமை, உறுதிப்பாடு அனைத்தும் அந்த உறவுப்பாலங்களை சரிசெய்வதே ஆகும். இந்த உறவுப்பாலத்தை உடைக்க அவர் ஒவ்வொரு முறையும் வெறுப்பை பயன்படுத்தும்போது, அன்பு மற்றும் இரக்கத்தால் அதை சரி செய்ய வேண்டியது எனது கடமையாகும்.

நாட்டின் வெவ்வேறு பாரம்பரியம், கலாசாரம், மதம் போன்றவை பற்றிய புரிதல் இல்லாமல் இந்த உறவுப்பாலங்களை கட்டியெழுப்ப முடியாது. பணிவு மற்றும் புரிந்து கொள்ளும் விருப்பத்துடன் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பல்வேறு மதத்தலங்ளுக்கு ஒருவர் சென்று வருவது அவசியம்.

ஆனால் இந்த தலங்களுக்கு நான் ஆணவத்துடன் சென்று வந்தால், நான் ஒரு முட்டாள். ஆயிரக்கணக்கான ஆண்டு வரலாறு கொண்ட கேரளாவுக்கு, தமிழ்நாட்டுக்கு எப்படி நான் ஆணவத்துடன் செல்ல முடியும். அவர்களை எனக்கு தெரியும் என்றும் எப்படி கூறமுடியும்?

நான் பணிவுடன்தான் அங்கு செல்ல வேண்டும். இல்லையெனில், இந்தியா என்றால் என்ன என்பதை நான் எப்படி வரையறுப்பது?

இந்தியா என்றால் என்ன? என்றும், கேரளாவுக்கு என்ன தேவை? என்றும் தமிழ்நாட்டுக்கு என்ன தேவை? என்றும் தனக்கு மட்டுமே தெரியும் என கூறும் ஒருவரின் ஆணவத்தை கற்பனை செய்து பாருங்கள். இதுதான் மோடியுடன் எனக்கு இருக்கும் மற்றொரு பிரச்சினை ஆகும்.

எனவே இந்த போராட்டம் பணிவுக்கும், ஆணவத்துக்கும் இடையேயானது. கோபத்திற்கும், இரக்கத்திற்கும் இடையேயானது. சுயநலத்துக்கும், மற்றவர்களின் நலனுக்கும் இடையேயானது ஆகும்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
Tags:    

Similar News