செய்திகள்
நிர்மலா சீதாராமன்

பாரத ஸ்டேட் வங்கி போன்று 5 பெரிய வங்கிகள் தேவை- நிர்மலா சீதாராமன் பேச்சு

Published On 2021-09-27 03:55 GMT   |   Update On 2021-09-27 03:55 GMT
புதிய தேவைகள் அதிகரித்து வருவதால், பாரத ஸ்டேட் வங்கி அளவுக்கு 5 பெரிய வங்கிகள் தேவை என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
மும்பை:

இந்திய வங்கிகள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:-

ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஏற்றுமதி இலக்கை பூர்த்தி செய்வது முக்கியம்.

ஓராண்டுக்குள் 40 ஆயிரம் கோடி டாலர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. வங்கிகள் வேகமாக செயல்படாவிட்டால், இதை நிறைவேற்ற முடியாது.

எனவே, ஏற்றுமதி வாடிக்கையாளர்களை அடையாளம் காணுங்கள். அவர்களது வர்த்தகத்தின் தன்மையை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் எந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வர்த்தகம் பற்றியும் நீங்கள் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.

2030-ம் ஆண்டுக்குள் 2 லட்சம் கோடி டாலர் (ரூ.150 லட்சம் கோடி) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அவற்றில் சரக்கு ஏற்றுமதி ரூ.75 லட்சம் கோடியாகவும், சேவை துறையில் ஏற்றுமதி ரூ.75 லட்சம் கோடியாகவும் இருக்கும்.

தொழில்நுட்பம் வேகமாக மாறி வருகிறது. இன்று புதியதாக தோன்றுவது, இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் நடைமுறைக்கு பொருந்ததாக இருக்கும். எனவே, தொடர்ந்து உங்களை நீங்களே புதுப்பித்து கொள்ளுங்கள். பொருளாதாரம் மாறி வருகிறது. அதற்கேற்ப தொழில்துறை தன்னை மாற்றி அமைத்துக்கொண்டு வருகிறது. புதிய சவால்கள் உருவெடுத்து வருகின்றன. புதிய தேவைகள் அதிகரித்து வருவதால், வங்கிச்சேவைகளை அதிகரிக்க வேண்டும். அதை பூர்த்தி செய்ய பாரத ஸ்டேட் வங்கி அளவுக்கு நான்கு, ஐந்து பெரிய வங்கிகள் தேவைப்படுகின்றன. நாட்டின் 7½ லட்சம் பஞ்சாயத்துகளில் மூன்றில் இரு பங்கு பஞ்சாயத்துகள், கண்ணாடி இழை மூலம் இணைக்கப்பட்டுள்ளன. எங்கே வங்கிக்கிளைகள் நேரடியாக இயங்க வேண்டும், எங்கே நேரடியாக செயல்படாமலே சேவை ஆற்றலாம் என்று வங்கிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News