செய்திகள்
விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித்

நாடு முழுவதும் சென்று போராடுவோம்- விவசாய சங்க தலைவர் எச்சரிக்கை

Published On 2021-09-26 12:00 GMT   |   Update On 2021-09-26 12:00 GMT
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாயித் கூறினார்.
பானிபட்:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். நாளை நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். 40 விவசாய சங்கங்கள் இணைந்த ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ என்ற அமைப்பின் சார்பில் இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயித் அரியானா மாநிலம் பானிபட்டில் நடந்த விவசாயிகள் மகா பஞ்சாயத்து கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு வேளாண் சட்டங்களை விரைவில் ரத்து செய்யாவிட்டால், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு நாடு முழுவதும், ஒவ்வொரு பகுதிக்கும் சென்று போராட்டம் நடத்தும் என்றார்.

நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மத்திய அரசுக்கு எதிராக பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள் நடத்தப்படும், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் ராகேஷ் திகாயித் கூறினார்.
Tags:    

Similar News