செய்திகள்
தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் உள்ள பகுதி

ஆந்திரா- ஒடிசா இடையே குலாப் புயல் இன்று கரையைக் கடக்கிறது

Published On 2021-09-26 10:56 GMT   |   Update On 2021-09-26 10:56 GMT
ஆந்திரா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விசாகப்பட்டினம்:

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று புயலாக மாறியது. அந்த புயலுக்கு பாகிஸ்தான் பரிந்துரைத்துள்ள குலாப் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இந்த புயல் வங்கக் கடலில் கிழக்கு, தென் கிழக்கு திசையில் மையம் கொண்டு இருந்தது. ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கே 320 கி.மீ. தூரத்தில் ஆந்திரா மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து கிழக்கே 440 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.

நேற்று மாலை முதல் குலாப் புயல் மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் இருந்து கடலில் கிழக்கு, தென் கிழக்கு பகுதியில் சுமார் 380 கி.மீ. தொலைவில் நிலை கொண்டிருந்தது. தொடர்ந்து இந்த புயல் மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

இதன் காரணமாக வங்கக் கடலில் சூறாவளி காற்று வீச தொடங்கியுள்ளது. கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. எனவே மீனவர்கள் 27-ந் தேதி வரை வங்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குலாப் புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும், ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே இன்று மாலை கரையை கடக்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் இன்று அதிகாலை குலாப் புயலின் நகரும் வேகத்தில் சற்று வேகம் குறைந்தது. எனவே இன்று நள்ளிரவு குலாப் புயல் கலிங்கப்பட்டினம், கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


குலாப் புயல் கரையை கடக்கும்போது 85 முதல் 120 கி.மீ. வேகத்தில் மிகபலத்த சூறாவளி காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பலத்த, மிகபலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆந்திரா, ஒடிசா ஆகிய இரு மாநிலங்களுக்கும் ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒடிசாவின் தென் மாவட்டங்களிலும், ஆந்திராவின் வட மாவட்டங்களிலும் குலாப் புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து ஒடிசா மாநிலத்தில் மல்கன்கிரி, நவ்ரங்பூர், கோராபூட், பூரி, கல்கந்தி ஆகிய மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆந்திராவில் கஞ்சம், கஜபதி மாவட்டங்களில் மிகபலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே ஒடிசா, ஆந்திரா மாநிலங்களில் சுமார் 10 மாவட்டங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகிறார்கள். ஒடிசாவில் 7 மாவட்ட கடலோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே குலாப் புயலால் பலத்த சேதம் ஏற்பட்டால் உடனுக்குடன் மீட்பு பணிகளை மேற்கொள்ள இரு மாநிலங்களிலும் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்பு குழுவும் வரவழைக்கப்பட்டுள்ளது.

இரு மாநிலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவர்களது கட்டுப்பாட்டில் 42 படைகள் தயார் நிலையில் உள்ளன. பாதிக்கப்படும் மக்களுக்கு உதவ முகாம்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

குலாப் புயல் அச்சுறுத்தலால் ஒடிசா, ஆந்திராவில் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 27-ந் தேதி வரை ரெயில்கள் இயக்கப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பூரி- சென்னை, சென்னை-பூரி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசா வழியாக ஆந்திரா வரும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே ஒடிசா அருகே கரையைக் கடக்கும் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, மேற்கு வங்காளத்துக்குள் செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

எனவே 29-ந் தேதி வரை மேற்கு வங்க மாநிலத்தில் உஷார் நிலையில் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படியுங்கள்... சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

Tags:    

Similar News