செய்திகள்
மீட்கப்பட்ட சிலைகளுடன் பிரதமர் மோடி

தமிழக நடராஜர் சிலையை மீட்டு வந்த பிரதமர் மோடி

Published On 2021-09-26 08:53 GMT   |   Update On 2021-09-26 08:53 GMT
1976 முதல் 2013 வரை வெளிநாடுகளில் இருந்து 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில் இதுவரை 200 பொருட்கள் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

புதுடெல்லி:

பிரதமர் மோடி கடந்த 22-ந்தேதி அமெரிக்கா சென்றார். ஐ.நா.சபை கூட்டம், குவாட் தலைவர்கள் கூட்டம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலாஹாரிஸ் ஆகியோருடன் சந்திப்பு. தொழில் நிறுவன அதிபர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

இந்த சந்திப்பில் இந்தியாவில் தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட், பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பே கடத்தி செல்லப்பட்டு அமெரிக்காவில் மீட்கப்பட்ட சிலைகள் மற்றும் கலை பொருட்களை அமெரிக்க அரசு பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தது.

மொத்தம் 157 கலை பொருட்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட வெண்கல நடராஜர் சிலையும் அடங்கும். இந்த சிலை 8.5 செ.மீ உயரத்தில் உள்ளது. இது சுமார் 800 ஆண்டுகள் பழமையானது.

ஒப்படைக்கப்பட்டதில் 10-ம் நூற்றாண்டில் மணற் கல்லில் தயாரிக்கப்பட்ட ரேவண்டா, 56 டெரகோட்டா துண்டுகள், பல வெண்கல சிலைகள், செப்பு பொருட்கள் உள்ளிட்ட விலைமதிக்க முடியாத பொருட்கள் உள்ளன.

இந்த பொருட்கள் அனைத்தும் பெரும்பாலும் 11 மற்றும் 14-ம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்டவை. கி.மு. 2000-ம் ஆண்டை சேர்ந்த ஒரு செப்பு மனித உருவம், 2-ம் நூற்றாண்டை சேர்ந்த டெரகோட்டா குவளை ஆகிய பொருட்களும் உள்ளன.

இவற்றில் 71 பொருட்கள் கலாச்சார பொருட்கள். 60 சிலைகள் இந்துமதம் சார்ந்தவை, 16 சிலைகள் புத்த மதம் சார்ந்தவை, 9 சிலைகள் சமணசமயம் சாந்தவை ஆகும்.

இந்த சிலைகள் மற்றும் கலை பொருட்கள் அனைத்தையும் பிரதமர் மோடி தன்னுடன் விமானத்தில் கொண்டு வருவந்தார்.

இவ்வாறு இந்தியாவில் பல்வேறு இடங்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் மற்றும் கலைப் பொருட்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளன. அவற்றை மீட்கும் முயற்சியில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

1976 முதல் 2013 வரை வெளிநாடுகளில் இருந்து 13 சிலைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில் இதுவரை 200 பொருட்கள் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News