செய்திகள்
நாக நதி சீரமைப்பு பணி

நாக நதியை மீட்டெடுத்த தமிழக பெண்கள்- மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பாராட்டு

Published On 2021-09-26 06:23 GMT   |   Update On 2021-09-26 06:23 GMT
தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
 
அவ்வகையில் 81-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் ஓடும் நாக நதியை குறிப்பிட்டு பிரதமர் பேசினார்.

‘திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் 'நாக நதி' சில ஆண்டுகளுக்கு முன் வறண்டு போனது. நாக நதியை மீட்டெடுக்க அப்பகுதி பெண்கள் மேற்கொண்ட முயற்சியால் இன்று நதியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. தமிழக சகோதர, சகோதரிகளின் முயற்சியைப் போன்று இந்தியா முழுவதும் பல்வேறு நதிகளை மீட்டெடுக்க பலரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்’ என்றார் பிரதமர் மோடி.

‘பல்வேறு நாட்கள் கொண்டாடப்பட்டாலும் நாம் மிக முக்கியமாக கொண்டாட வேண்டிய தினம் உலக நதி தினம். மேற்கு இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் நீர் பற்றாக்குறை உள்ளது. கூட்டு முயற்சியின் மூலம் நமது ஆறுகளை மாசு இல்லாததாக மாற்ற முடியும். கங்கையை போற்றுவோம் திட்டம் இன்று வெற்றிகரமான திட்டமாக திகழ்கிறது’ என்றும் பிரதமர் மோடி பேசினார்.
Tags:    

Similar News