செய்திகள்
பிரதமர் மோடி

ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் இவற்றையெல்லாம் பேசுவேன்- பிரதமர் மோடி

Published On 2021-09-22 07:04 GMT   |   Update On 2021-09-22 11:18 GMT
அமெரிக்க சுற்றுப்பயணம், முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பாக அமையும் என பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா. பொதுச்சபை கூட்டம் கடந்த 14-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. குவாட் மாநாடும் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, தனது சுற்றுப்பயணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, அமெரிக்க சுற்றுப் பயணத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இடையிலான விரிவான உலகளாவிய கூட்டாண்மை யுக்தி குறித்து ஜனாதிபதி ஜோ பைடனுடன் மதிப்பாய்வு செய்ய உள்ளதாகவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

‘அமெரிக்க ஜனாதிபதி பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானின் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடன் குவாட் தலைவர்களின் உச்சிமாநாட்டில் பங்கேற்கிறேன். இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான, எங்கள் பகிரப்பட்ட பார்வையின் அடிப்படையில், எதிர்கால  செயல்பாடுகளுக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண இந்த உச்சிமாநாடு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 

மேலும், அமெரிக்காவுக்கான எனது பயணம், அமெரிக்காவுடனான விரிவான உலகளாவிய கூட்டாண்மை யுக்தியை வலுப்படுத்தவும், நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை வலுப்படுத்தவும், முக்கியமான உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லவும் ஒரு வாய்ப்பாக அமையும். 

கொரோனா தொற்றுநோய், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம் மற்றும் இதர முக்கியப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட வேண்டிய உலகளாவிய சவால்கள் குறித்து ஐ.நா. பொதுசபை கூட்டத்தில் பேச உள்ளேன். ’ என்றும் மோடி கூறினார்.
Tags:    

Similar News