செய்திகள்
சோனியா காந்தி -ராகுல் காந்தி

சோனியா, ராகுலுக்கு எதிர்ப்பு வலுக்கிறது - அதிருப்தி தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி

Published On 2021-09-20 06:53 GMT   |   Update On 2021-09-20 07:53 GMT
சோனியாகாந்தி, ராகுல் காந்தி இருவருடைய செயல்பாடுகளையுமே விமர்சிக்கும் வகையில் டுவிட்டரில் கபில்சிபல் கருத்துக்கள் தெரிவித்திருந்தார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகி 2 ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னும் காங்கிரசுக்கு யார் தலைவர் என்பது குழப்பமாகவே உள்ளது.

நீண்ட காலமாக சோனியாகாந்தி இடைக்கால தலைவராக இருந்து வருகிறார். ராகுல்காந்தி மீண்டும் தலைவர் ஆவதற்கு சம்மதிப்பார் என்ற எதிர்பார்ப்புடன் காங்கிரஸ் கட்சியினர் காத்திருக்கிறார்கள்.

ராகுல்காந்தியின் முடிவு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கட்சி கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. பல மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்து உள்ளது.

இதே நிலை நீடித்தால் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத நிலை உருவாகி விடும் என்கிற அச்சம் ஏற்பட்டு இருக்கிறது. எனவே மூத்த தலைவர்கள் 23 பேர் சேர்ந்து சோனியாவுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். அதில் கட்சியை சீரமையுங்கள், நிரந்தர தலைவரை தேர்வு செய்யுங்கள் என்று கூறி இருந்தனர்.

ஆனால் இவ்வாறு கடிதம் எழுதியவர்களை கட்சிக்கு எதிரான நபர்களாக கருதினார்களே தவிர அவர்கள் வைத்த கோரிக்கைக்கு தீர்வு காணப்படவில்லை.

எனவே கபில்சிபல் போன்ற தலைவர்கள் கட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பதுடன் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வலுவாகவும் இருந்து வந்தது.

முதல்-மந்திரி அம்ரீந்தர் சிங்குக்கு மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும் இருந்தது. ஆனால் திடீரென அவரை மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதுவும் மூத்த காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.


கபில்சிபல் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உத்தரகாண்ட், குஜராத், பஞ்சாப் என காவலர்களை மாற்றி இருக்கிறார்கள். பழைய பழமொழி ஒன்று உண்டு. பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் உரிய தீர்வு காணாவிட்டால் நாளை அது மிகப்பெரிய பிரச்சினையாக மாறி விடும் என்று பழமொழி கூறுகிறது என குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது காங்கிரஸ் கட்சியில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு காணப்படுவது இல்லை என்பதை அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.

சோனியாகாந்தி, ராகுல் காந்தி இருவருடைய செயல்பாடுகளையுமே விமர்சிக்கும் வகையில் அவருடைய கருத்துக்கள் வந்துள்ளன.

இதே போல மூத்த தலைவர் மணீஷ்திவாரியும் கட்சி முடிவை மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார். “இதுதான் காங்கிரஸ் கட்சி” என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சசிதரூர் வெளியிட்டுள்ள செய்தியில், “காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவர் வேண்டும். சோனியா காந்திக்கு எதிராக யாரும் பேசவில்லை. சோனியாவும் சிறப்பாக கட்சியை வழி நடத்தியவர். ஏற்கனவே சோனியாகாந்தி பதவி விலகியதும் ராகுல்காந்தி தலைவர் பதவிக்கு வந்து சிறப்பாகவே செயல்பட்டார். ராகுல் உடனடியாக தலைவர் பதவிக்கு வர வேண்டும். அதுவும் விரைவாக நடக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்...பஞ்சாப் முதல்வர் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பு

Tags:    

Similar News