செய்திகள்
பாஜக மாநில செயற்குழு கூட்டத்தை பசவராஜ் பொம்மை, எடியூரப்பா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் முயற்சி: எடியூரப்பா பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2021-09-20 02:18 GMT   |   Update On 2021-09-20 02:18 GMT
பா.ஜனதாவின் எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுத்து கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியை கவிழ்க்க காங்கிரசார் முயற்சிப்பதாகவும், அவர்கள் குதிரை பேரத்தில் ஈடுபடும் தந்திரம் பலிக்காது என்றும் எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தாவணகெரேவில் நேற்று நடந்தது.

கூட்டத்தை கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, கட்சியின் கர்நாடக மாநில மேலிட பொறுப்பாளர் அருண்சிங் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசும்போது கூறியதாவது:-

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சிக்கு இழுக்க அக்கட்சியின் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்பட அக்கட்சியைச் சேர்ந்த சிலர் முயற்சி செய்கிறார்கள். இதற்காக சிலரை டி.கே.சிவக்குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் காங்கிரசில் சேர மாட்டார்கள். இந்த முயற்சியில் டி.கே.சிவக்குமார் வெற்றி பெற மாட்டார். சிந்தகி, ஹானகல் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை பா.ஜனதா தீவிரமாக எடுத்து செயல்படும். அங்கு பா.ஜனதா வெற்றி பெற பாடுபடுவோம்.

அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 130 முதல் 140 தொகுதிகளில் வெற்றி பெறும். அதனால் காங்கிரசார் என்னை குறைவாக மதிப்பிடக்கூடாது. மாநிலத்தில் ஒரு மாதம் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்த வேண்டியுள்ளது. எதிர்க்கட்சிகளை நமது கட்சியினர் குறைவாக மதிப்பிட வேண்டாம். அவர்களுக்கும் பலம் உள்ளது. அரசியல் தந்திரம் செய்வார்கள்.

கர்நாடக பா.ஜனதாவை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும். பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் தலைவர்களை நமது கட்சியில் சேர்க்க வேண்டும். நான் ஒருவனே சுற்றுப்பயணம் செய்யும் நிலை ஏற்படவில்லை. நான் சுற்றுப்பயணம் செய்யும்போது மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருப்பார்கள்.

கட்சியில் 4 குழுக்களை அமைத்து சுற்றுப்பயணம் செய்ய வேண்டும். பூத் மட்டத்தில் கட்சியை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய-மாநில அரசுகளின் திட்டங்களை வீடு வீடாக சென்று மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். எக்காரணம் கொண்டும் இந்து கோவில்களை இடிக்கக்கூடாது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு இருந்தால், அதுகுறித்து மேல்முறையீடு செய்யப்படும். கோவில்களை இடிப்பதை தடுக்க உறுதியான முடிவு எடுத்துள்ளோம். ஒரு சில சம்பவங்களால் யாரும் ஆதங்கபடக்கூடாது. மோடியின் பெயரை பயன்படுத்தி வெற்றி பெறாமல், நமது நல்ல பணிகள் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற்று வெற்றி பெற வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-

மைசூரு மாவட்டத்தில் இந்து கோவில் இடிக்கப்பட்டதால், அங்குள்ள பக்தர்களின் மனது வலிக்கிறது என்பதை நான் அறிவேன். அதை சரிசெய்யும் பணியை நான் செய்வேன். எங்கள் கட்சியின் ஆலோசனை பெற்று அங்குள்ள மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் உரிய முடிவு எடுக்கப்படும். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அந்த முடிவு இருக்கும்.

இந்த அரசு பா.ஜனதா தொண்டர்களுடையது. அவர்களின் உணர்வு எங்களுக்கு புரிகிறது. அவர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் முடிவு எடுக்கப்படும். நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சிகள் நடக்கிறது. குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களில் இந்த முயற்சி நடக்கிறது. அமைதியை சீர்குலைக்க முயற்சி செய்பவர்களை ஒடுக்க அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரஸ் சுதந்திர போராட்டங்கள் அடிப்படையில் அரசியல் செய்தது. அக்கட்சிக்கு ஒரு தெளிவான கொள்கை, நாட்டின் நலனில் அக்கறை போன்றவை இருக்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு காங்கிரசை கலைக்க வேண்டும் என்று காந்தி சொன்னார். காந்தி ஜனநாயகத்தை விரும்பினார். இன்னொருபுறம் மற்றொரு காந்தி (இந்திரா காந்தி), சர்வாதிகாரியாக இருந்து ஆட்சி செய்தார். இது குழப்பமான ஆட்சியாக இருந்தது. எல்லாவற்றையும் சுத்தம் செய்யும் பணி பா.ஜனதா தோளில் விழுந்துள்ளது. அந்த பணியை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

கர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட எந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம்(எஸ்) கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன. ஆனால் அந்த 2 கட்சிகளையும் சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் சேர்ந்ததால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், அதற்காக குதிரை பேரத்தில் ஈடுபட்டு பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க காங்கிரசார் முயற்சிப்பதாகவும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா மறைமுகமாக குற்றச்சாட்டை கூறியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது சட்டசபை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அவரது குற்றச்சாட்டு குறித்து இன்று நடைபெறும் கூட்டத்தில் காங்கிரசார் பேசி சட்டசபையை முடக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:    

Similar News