செய்திகள்
ஆசிரியைகள் கட்டிக் கொடுத்த வீடுகள்

ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கும் ஆசிரியைகள்

Published On 2021-09-19 04:07 GMT   |   Update On 2021-09-19 04:07 GMT
ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு என ஆசிரியை லிஸ்சி கூறினார்.
கொச்சி:

கேரளாவில் வீடு இல்லாத ஏழை மாணவிகளுக்காக இலவசமாக வீடு கட்டி கொடுக்கும் பெண்கள் பள்ளி ஆசிரியைகளின் சமூக பணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

கேரள மாநிலம் கொச்சி மாவட்டம், தோப்பும்பாடியில் உள்ள பள்ளியில் பணியாற்றும் இரண்டு ஆசிரியைகள் இணைந்து இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். 

2014ம் ஆண்டு தந்தையை இழந்த ஒரு மாணவிக்காக வீடு கட்டியதில் தொடங்கிய இந்த பணி தொடர்ந்து நடைபெறுகிறது. தற்போது வரை மாணவிகளுக்காக 150 வீடுகள் கட்டி கொடுத்திருப்பதாக  கூறுகின்றனர் இந்த ஆசிரியைகள். வீடு கட்டி கொடுக்கும் பணிக்காக நன்கொடை மூலம் நிதி சேகரிக்கின்றனர்.



இதுபற்றி அந்த ஆசிரியைகளின் ஒருவரான லிஸ்சி கூறுகையில், சொந்த நிலம் இருந்தும் சரியான வீடு இல்லாத தங்கள் மாணவிகளுக்கு நிரந்தர வீடு கட்டுவதற்காக  ஹவுஸ் சேலஞ்ச் என்ற திட்டத்தை தொடங்கியதாக குறிப்பிட்டார்.

“இந்த திட்டத்தை தொடங்கிய பிறகு பல குடும்பங்களுக்கு நிலம் இல்லை என்பதை அறிந்தோம். எனவே அவர்களுக்காக நிலத்தையும் தானம் செய்யுமாறு கேட்டு மக்களை அணுகினோம். ஒத்துழைப்பு மற்றும் பகிர்ந்தளிக்கும் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் வீடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் கனவு” என்கிறார் லிஸ்சி
Tags:    

Similar News