செய்திகள்
தடுப்பூசி போடும் பணி

75 கோடியை கடந்தது... கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல்கல்

Published On 2021-09-13 13:28 GMT   |   Update On 2021-09-13 13:28 GMT
தடுப்பூசி செலுத்தும் வேகத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான அச்சம், தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெறுகிறது.

இதனால் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து, ஆகஸ்ட் 7ம்தேதி 50 கோடி என்ற நிலையை எட்டியது. ஆகஸ்ட் 25ம் தேதி 60 கோடியை கடந்தது. 
 
இந்நிலையில், நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை இன்று 75 கோடி என்ற மைல் கல்லை கடந்துள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இடைவிடாமல் புதிய பரிமாணங்களை உருவாக்கி வருவதாகவும், 75வது சுதந்திர தின ஆண்டில், நாடு 75 கோடி டோஸ் தடுப்பூசியைக் கடந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி செலுத்தும் வேகத்தை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல் 10 கோடி தடுப்பூசி போடுவதற்கு 85 நாட்கள் ஆனது. இப்போது, வெறும் 13 நாட்களில் 65 கோடியில் இருந்து 75 கோடி என்ற சாதனையை அடைந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலையைத் தடுக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்த அரசு திட்டமிட்டுளள்து குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News