செய்திகள்
முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பூபேந்திர படேல்

குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர படேல் தேர்வு -விரைவில் பதவியேற்பு

Published On 2021-09-12 11:03 GMT   |   Update On 2021-09-12 11:07 GMT
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக, காந்தி நகரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
காந்திநகர்:

பாஜக ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் முதல்வர் விஜய் ரூபானி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். கட்சியில் அனைவருக்கும் சமமான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற பாஜகவின் கொள்கையின்படி பதவி விலகியதாக கூறினார்.  தனது ராஜினாமாவின் மூலம் குஜராத் மாநிலத்திற்கு புதிய தலைவர் கிடைப்பார், புதிய தொலைநோக்கு திட்டங்களுக்கு புதிய தலைமை தேவை. பா.ஜ.க. தேசியத் தலைமையின் கீழ் கட்சிப் பணியை தொடருவேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பாஜக ஆட்சிக்காலம் முடிவடைய இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், அவர் பதவி விலகியதால் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான பணிகளை பாஜக தலைமை தொடங்கியது.  முதல்வரை தேர்வு செய்வதற்கு, கட்சியின் மத்திய பார்வையாளர்களாக மத்திய மந்திரிகள் பிரல்ஹாத் ஜோஷி, நரேந்திர சிங் தோமர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். அவர்கள் இன்று குஜராத் வந்து கட்சியின் மாநில தலைவருடன் ஆலோசனை நடத்தினர்.



பின்னர், முதல்வரை தேர்வு செய்வதற்காக, காந்தி நகரில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்வர்) பூபேந்திர படேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தகவலை மத்திய பார்வையாளர் தோமர் உறுதி செய்தார். இதையடுத்து கட்சி மேலிடம் ஒப்புதல் வழங்கியதும், பூபேந்திர படேல், விரைவில் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

Tags:    

Similar News