செய்திகள்
திருப்பதி கோவில்

வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்த திருப்பதி தேவஸ்தானம்

Published On 2021-09-12 07:22 GMT   |   Update On 2021-09-12 07:22 GMT
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் சோதனை ஓட்டமாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததால் பக்தர்கள் தரிசன எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு உள்ளது. இலவச தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என தேவஸ்தானத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில நாட்களுக்கு முன்பு சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும் சோதனை ஓட்டமாக இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பதி பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசன் பக்தர்கள் தங்கும் விடுதியில் இந்த தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இலவச தரிசனம் வழங்கப்பட்ட முதல் நாளே ஏராளமான பக்தர்கள் தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்காக குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதலே ஏராளமான பக்தர்கள் ஸ்ரீநிவாசன் பக்தர்கள் தங்கும் விடுதி முன்பாக குவிந்தனர். காலை 8 மணிக்கு தேவஸ்தான ஊழியர்கள் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்குவதற்காக வந்தனர்.

அப்போது சித்தூர் மாவட்டத்தை அல்லாத கடப்பா, நெல்லூர், அனந்தபுரம் உள்பட வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதேபோல் தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் குவிந்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தேவஸ்தான அதிகாரிகள் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுவதாகவும் மற்றவர்கள் கலைந்து செல்லுமாறும் அறிவித்தனர்.

இலவச தரிசன டிக்கெட் பெறுவதற்காக இரவு முதல் விடிய விடிய காத்திருந்த பக்தர்கள் இந்த அறிவிப்பைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தேவஸ்தான அதிகாரிகளிடம் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் பக்தர்கள் கலைந்து சென்றனர்.

சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டுமே 2 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. சித்தூர் மாவட்டத்தை அல்லாத வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக வரவேண்டாம் என்றனர்.

வெளி மாவட்ட, மாநில பக்தர்களுக்கும் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News