செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 28,591 பேருக்கு தொற்று

Published On 2021-09-12 04:27 GMT   |   Update On 2021-09-12 04:27 GMT
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 181 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 338 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,42,655 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 28,591 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 3 கோடியே 32 லட்சத்து 36 ஆயிரத்து 921 ஆக உயர்ந்தது.

கடந்த 8-ந் தேதி நிலவரப்படி பாதிப்பு 43,263 ஆக இருந்தது. மறுநாள் 34,973 ஆகவும், அதற்கு மறுநாள் 33,376 ஆகவும் குறைந்தது. இந்நிலையில் நேற்று 29 ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 20,487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக சரிந்து 20 ஆயிரமாக குறைந்துள்ளது.

மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மத்திய சுகாதாரத்துறை பட்டியலில் சேர்க்கப்படவில்லை. தமிழ்நாட்டில் 1,639, ஆந்திராவில் 1,145 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 181 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 338 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,42,655 ஆக உயர்ந்தது.

இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1,38,096 பேர் அடங்குவர்.

நேற்றைய பாதிப்பைவிட நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த வகையில் நேற்று ஒரேநாளில் 34,848 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர்.

இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 24 லட்சத்து 9 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 3,84,921 பேர் ஆஸ்பத்திரிகளில் சிசிச்சை பெற்று வருகிறார்கள்



நேற்று ஒரே நாளில் 72,86,883 தடுப்பூசி டோஸ் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 73 கோடியை 82 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி, நேற்று நாடு முழுவதும் 15,30,125 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 54.18 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.


Tags:    

Similar News