செய்திகள்
பலாத்காரம்

கொடூரமாக தாக்கி கற்பழிக்கப்பட்ட மும்பை பெண் உயிரிழப்பு- வேன் டிரைவர் கைது

Published On 2021-09-11 11:51 GMT   |   Update On 2021-09-11 13:02 GMT
மும்பையில் பெண்ணை கொடூரமாக தாக்கி கற்பழித்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை 21ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.
புதுடெல்லி:

டெல்லி நிர்பயா சம்பவம் போன்று, மும்பையில் 32 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மும்பை புறநகர் அந்தேரியில் உள்ள சகிநாகா பகுதியில், நேற்று அதிகாலையில் அந்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். 

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை போலீசார் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் உறுப்புகள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தன. அவரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது. 

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டெம்போ வாகனத்தில் இந்த கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது. அந்த வாகனத்துக்குள் ரத்தக்கறைகள் படிந்திருந்தன. வேனுக்குள் பெண் மயங்கி கிடந்ததை பார்த்த காவலாளி ஒருவர், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதைக்கேட்டு போலீசார் சென்றபோதுதான், இந்த திடுக்கிடும் சம்பவம் தெரிய வந்தது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக மோகன் சவுகான் (வயது 45) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை 21ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

விசாரணையில் மோகன் சவுகானின் சொந்த ஊர் உத்தர பிரதேச மாநிலம் ஜான்பூரைச் சேர்ந்தவர் என்பதும், திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்தது.

மோகன் சவுகான் போதைப்பழக்கத்தற்கு அடிமையானதால் அவருடனான தொடர்புகளை குடும்பத்தினர் துண்டித்துள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வந்த அவர், வாகனங்களில் இருந்த பேட்டரிகள் மற்றும் பெட்ரோலை திருடி விற்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மோகன் சவுகானும், அவரால் கொல்லப்பட்ட பெண்ணும் சாலையோர பிளாட்பாரத்தில் வசித்துள்ளனர். எனவே, இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.  

அதேசமயம், மோகன் சவுகான், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக் கொள்ளாததால், நடந்த சம்பவங்கள் குறித்த ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News