செய்திகள்
அரியானா உள்துறை மந்திரி அனில் விஜ்

தவறு செய்திருந்தால் விவசாயிகள் மீதும் நடவடிக்கை பாயும்- அரியானா அமைச்சர் எச்சரிக்கை

Published On 2021-09-09 10:10 GMT   |   Update On 2021-09-09 10:10 GMT
விவசாயிகள் மீது தடியடி நடத்துவதற்கு உத்தரவிட்ட அதிகாரி மற்றும் விவசாயிகளின் மண்டையை உடைக்கவேண்டும் என கூறிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
சண்டிகர்:

அரியானா மாநிலத்தில் பாஜக தலைவர்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கர்னால் மாவட்டத்தில் கடந்த மாதம் 28ம் தேதி பாஜக தலைவர்களுக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் நடத்தும் விவசாயிகளின் மண்டையை உடைக்கும்படி போலீசாரிடம் கர்னால் துணைக் கோட்ட ஆட்சியர் ஆயுஷ் சின்கா உத்தரவிட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் போலீசாரிடம் பேசுவது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. அந்த அதிகாரிக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். நடந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



ஆகஸ்ட் 28ம் தேதி விவசாயிகள் மீது தடியடி நடத்துவதற்கு உத்தரவிட்ட அதிகாரி மற்றும் விவசாயிகளின் மண்டையை உடைக்கவேண்டும் என கூறிய அதிகாரி ஆயுஷ் சின்கா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். 

இதுபற்றி உள்துறை அமைச்சர் அனில் விஜ் கூறுகையில், ஆயுஷ் சின்கா மீதான புகார் மட்டுமின்றி கர்னால் மாவட்டத்தில் அன்று நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் அரசு விசாரித்து ஆய்வு செய்யும் என்றார். 

விசாரணை நடத்தாமல் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க முடியாது என்று கூறிய அவர், விவசாய சங்க தலைவர்கள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Tags:    

Similar News