செய்திகள்
பிரதமர் மோடி

வருகிற 14-ந்தேதி உத்தரபிரதேசம் செல்லும் பிரதமர் மோடி

Published On 2021-09-07 07:40 GMT   |   Update On 2021-09-07 08:23 GMT
உத்தரபிரதேசத்தில் அனைத்து கட்சிகளுமே இப்போது தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளன. மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசி ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.
புதுடெல்லி:

உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பா.ஜனதா  ஆட்சியை தக்க வைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதற்காக முதல்-அமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜனதா மேலிடத் தலைவர்கள் தேர்தல் பிரசார பணிகளை தொடங்கி விட்டனர்.

உத்தரபிரதேச தேர்தல் முடிவு அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் உத்தரபிரதேச வெற்றி முக்கியமானது என்று பா.ஜனதா கருதுகிறது. எனவே எப்படியாவது உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் அனைத்து கட்சிகளுமே இப்போது தேர்தல் பணிகளை கவனிக்க தொடங்கி உள்ளன.  மஜ்லீஸ் கட்சி தலைவர் ஓவைசி ஏற்கனவே பிரசாரத்தை தொடங்கிவிட்டார். அதே போல பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் இன்று பிரசாரத்தை தொடங்க உள்ளார்.



பிரதமர் நரேந்திரமோடி வருகிற 14-ந்தேதி உத்தரபிரதேச மாநிலம் செல்ல உள்ளார். அலிகாரில் உள்ள ராஜா மகேந்திரசிங் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு விழாவில் அவர் பங்கேற்கிறார்.

இதை தொடர்ந்து  அரசியல் நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இருப்பதாக தெரிகிறது. தேர்தல் பணிகளின் ஒரு அங்கமாக அவர் அலிகாரில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு செய்து இருக்கிறார்.

பிரதமரின் சுற்றுப்பயணம் உத்தரபிரதேச பா.ஜனதாவிற்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News