செய்திகள்
பிரதமர் மோடி

இந்த மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி

Published On 2021-09-04 10:24 GMT   |   Update On 2021-09-04 12:48 GMT
இங்கிலாந்தில் நடந்த ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணம் ரத்து செய்யப்பட்டது.
புதுடெல்லி:

பிரதமர் மோடி இந்த மாதம் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய உள்ளதாக அரசு வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாதம் இறுதியில் அவரது அமெரிக்கா சுற்றுப்பயணம் இருக்கும் என்று தெரிகிறது.

வருகிற 22-ந்தேதி முதல் 27-ந்தேதிக்குள் அமெரிக்காவுக்கு செல்லலாம் என்றும் அங்கு வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கு செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 23, 24-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும் மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.

அப்போது பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற பிறகு அங்கு
பிரதமர் மோடி
முதல் முறையாக செல்ல உள்ளார்.

ஏற்கனவே இரு நாட்டு தலைவர்களும் மூன்று முறை காணொலி காட்சி முலம் ஆலோசனை நடத்தி உள்ளனர்.


மார்ச் மாதம் நடந்த குவாத் மாநாடு, ஏப்ரலில் நடந்த பருவ நிலை மாற்ற மாநாடு மற்றும் ஜூனில் நடந்த ஜி-8 மாநாட்டில் இருவரும் காணொலி காட்சி மூலம் பங்கேற்று இருந்தனர்.

இங்கிலாந்தில் நடந்த ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி நேரடியாக பங்கேற்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்திப்பதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக பிரதமர் மோடியின் இங்கிலாந்து பயணம் ரத்து செய்யப்பட்டது.

தற்போது ஜோ பைடனும், மோடியும் நேரில் சந்திக்க உள்ளனர். இரு தலைவர்கள் சந்திப்பில் முக்கிய வி‌ஷயங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது.

குறிப்பாக ஆப்கானிஸ்தான் நிலவரம் மற்றும் சீனாவின் செயல்பாடு ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ள சூழ்நிலையில் ஜோ பைடன்- மோடி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அது விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News