செய்திகள்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

கடுமையான நெருக்கடியை உருவாக்கும்... முழு ஊரடங்கை நிராகரித்த கேரள முதல்வர்

Published On 2021-09-03 17:16 GMT   |   Update On 2021-09-03 17:16 GMT
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து கவலை அளிக்கும் வகையில் உள்ளது. கடந்த சில தினங்களாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவானது. இன்று சற்று குறைந்து, 29,322 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும் ஊரடங்கை கடுமையாக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உள்ளாட்சி அதிகாரிகளிடையே பேசிய முதல்வர் பினராயி விஜயன், முழு ஊரடங்கு பிறப்பிக்க முடியாது என்று கூறினார்.

“மாநிலம் தழுவிய 
ஊரடங்கு
 போன்ற நடவடிக்கைகளை யாரும் ஆதரிக்கவில்லை. இது பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கும். நாம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எச்சரிக்கையுடன் இருப்பதில் சமரசம் செய்யக்கூடாது.

உள்ளூர் அளவிலான மருத்துவ கவனிப்பு மிக முக்கியமானது. கண்காணிப்பு குழு, அதிவிரைவு மருத்துவக் குழு, வார்டு நிலையிலான குழு, காவல்துறை மற்றும் துறைசார்ந்த உயர் அதிகாரிகள் தலைமையில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ள அனைவரும் கண்காணிக்கப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் சுறுசுறுப்பாக செயல்பட்டால், கூடிய விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்”  என்றும் பினராயி விஜயன் கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News