செய்திகள்
மெகபூபா முப்தி

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து: ஆப்கானிஸ்தானை ஒப்பிட்டு மத்திய அரசை எச்சரித்த மெகபூபா முப்தி

Published On 2021-08-22 04:21 GMT   |   Update On 2021-08-22 04:21 GMT
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப்பெற்ற மத்திய அரசு, அம்மாநிலத்தை இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்ப்பதுடன், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என அம்மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

முன்னாள் முதல்வரும், ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான மெகபூபா முப்தி மத்திய அரசை எதிர்த்து கடுமையாக பேசி வருகிறார்.

கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தனர். அதே நிலை ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து விவகாரத்தில் ஏற்பட வேண்டாம் என மத்திய அரசை எச்சரிக்கும் விதத்தில் மெகபூபா முப்தி பேசியுள்ளார்.

இதுகுறித்து மெகபூபா முப்தி பேசுகையில் ‘‘மத்திய அரசு எங்களை பரிசோதிக்க வேண்டாம். மத்திய அரசு அண்டை நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பார்த்திருக்கும். சூழ்நிலையை புரிந்து கொண்டு ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை சரி செய்ய வேண்டும்.

சூப்பர் பவர் கொண்ட அமெரிக்கா அவர்களுடைய பெட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து ஓடிவிட்டது. சட்டவிரோதமாக, அரசியலைப்பு சட்டத்திற்கு எதிராக ஜம்மு-காஷ்மீரின் அடையாளத்தை பறித்துக்கொண்ட தவறை சரி செய்து கொள்ள முன்னாள் முதல்வர் வாஜ்பாய் போன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த இன்னும் வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் அது மிகக் காலதாமதமாகிவிடும்.

இந்திய அரசு எங்களிடமிருந்து பறித்ததை திருப்பித்தர வேண்டும், மற்றும் காஷ்மீர் பிரச்சினையை அங்குள்ள மக்களின் விருப்பத்திற்கும் ஏற்ப தீர்க்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மெகபூபா முப்தி யூனியன் பிரதேசத்தில் நிலத்தை இழந்த பிறகு வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்தியாவுக்கு எதிராக சதி செய்பவர்கள் அழிக்கப்படுவார்கள் என பா.ஜனதாவிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Tags:    

Similar News