செய்திகள்
சமையல் எண்ணெய்

விலை உயர்வை கட்டுப்படுத்த சமையல் எண்ணெய்க்கு வரி குறைப்பு

Published On 2021-08-21 04:13 GMT   |   Update On 2021-08-21 04:13 GMT
கச்சா சோயா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி, 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பொருள் சமையல் எண்ணெய் ஆகும். சமீபகாலமாக அதன் விலை அதிகரித்து வருகிறது.

அதனால், கடந்த ஜூன் 29-ந் தேதி கச்சா பாமாயில் மீதான இறக்குமதி வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டது. சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மீதான இறக்குமதி வரி 37.5 சதவீதமாக குறைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கச்சா சோயா எண்ணெய், கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி, 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் நேற்று வெளியிட்ட அறிவிப்பாணையில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

மேலும், சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரி, 45 சதவீதத்தில் இருந்து 37.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி குறைப்பு செப்டம்பர் 30-ந் தேதிவரை அமலில் இருக்கும். உள்நாட்டு வரத்தை அதிகரித்து, அதன் விலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த வரி குறைப்பு அமல்படுத்தப்படுகிறது.

கச்சா சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை இறக்குமதி வரி மீது 20 சதவீத வேளாண் உள்கட்டமைப்பு உபரி வரியும், 10 சதவீத சமூக நல்வாழ்வு உபரி வரியும் விதிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரி மீது 10 சதவீத சமூக நல்வாழ்வு உபரி வரி மட்டும் விதிக்கப்படுகிறது.


Tags:    

Similar News