செய்திகள்
பசவராஜ் பொம்மை

தமிழகம் எதிர்த்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம்: பசவராஜ் பொம்மை உறுதி

Published On 2021-08-16 01:54 GMT   |   Update On 2021-08-16 01:54 GMT
கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளா, மராட்டிய எல்லையில் உள்ள 8 மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
பெங்களூரு :

பெங்களூரு மாநகராட்சி சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

விடுதலை போராட்டத்தில் ஏராளமானவர்கள் உயிர்த்தியாகம் செய்தனர். மகாத்மா காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், சர்தார் வல்லபாய் பட்டேல், பகத்சிங், மவுலானா அபுல்கலாம் ஆசாத், நேரு உள்ளிட்ட தலைவர்களின் பங்களிப்பு வரலாற்று முக்கியமானது. விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த அனைவருக்கும் எனது மரியாதையை செலுத்துகிறேன்

பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையுடன் கூடிய நடவடிக்கைகளால் கொரோனா பரவலை சரியான முறையில் நிர்வகித்தோம். கர்நாடகத்தில் எடியூரப்பாவின் திறன்மிகு ஆட்சியால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. மக்களின் உயிர்களை காக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் நாங்கள் மோசமான அளவில் நடவடிக்கை எடுத்தோம். பல்வேறு தரப்பு தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.

கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கேரளா, மராட்டிய எல்லையில் உள்ள 8 மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும். சுப்ரீம் கோர்ட்டு, காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கூடுதல் நீர் ஒதுக்கீட்டை பயன்படுத்த இந்த அணை உதவும்.

தமிழகம் எதிர்ப்பு தெரிவித்தாலும் நாங்கள் மேகதாதுவில் புதிய அணையை கட்டியே தீருவோம். இந்த திட்டத்தில் இருந்து கர்நாடக அரசு பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. இது குடிநீருக்கும், மின் உற்பத்திக்கும் அவசியமானது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

Similar News