செய்திகள்
ஆன்லைன் வகுப்பு

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் 36 சதவீதம் மாணவ-மாணவிகள் தலைவலி, கழுத்து வலியால் அவதி

Published On 2021-08-10 06:20 GMT   |   Update On 2021-08-10 06:20 GMT
மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு நேரில் சென்றால்தான் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் உற்சாகம் அடைவார்கள்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் மூலமே வகுப்புகள் நடந்து வருகிறது. ஆசிரியர்கள் மட்டும் பள்ளிகளுக்கு சென்று ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகிறார்கள்.

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் பலருக்கு அடிக்கடி உடல் நலக்கோளாறு ஏற்படுவதாகவும், இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக கேரள சட்டசபையில் நேற்று காங்கிரஸ் (எஸ்) உறுப்பினர் கடனப்பள்ளி ராமச்சந்திரன் கேள்வி எழுப்பினார். அதில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவ-மாணவிகளின் மன அழுத்தத்தை போக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு கேரள கல்வி மந்திரி சிவன்குட்டி பதில் அளித்து பேசியதாவது:-

பள்ளிகளில் தொடர்ந்து ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருவது நல்லதல்ல. இதன்மூலம் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படுகின்றன.

தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வரும் மாணவர்களில் 36 சதவீதம் பேருக்கு தலைவலியும், கழுத்து வலியும் ஏற்படுகிறது. போதுமான உடற்பயிற்சி இல்லாததே இதற்கு காரணம்.

மேலும் அவர்கள் மனதளவிலும் சோர்ந்து போகிறார்கள். பள்ளிகளுக்கு நேரில் சென்றால்தான் அவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும் உற்சாகம் அடைவார்கள். எனவே மத்திய அரசு அனுமதி அளித்தால் கேரளாவில் பள்ளிகளை கட்டம், கட்டமாக திறக்க நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News