செய்திகள்
பசவராஜ் பொம்மை

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும்: பசவராஜ் பொம்மை நம்பிக்கை

Published On 2021-08-10 01:58 GMT   |   Update On 2021-08-10 07:44 GMT
மேகதாது அணை விவகாரத்திலும் தமிழகம் அரசியல் செய்கிறது. இந்த அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் என்ன கூறினாலும் அதை கேட்க மாட்டோம். அணையை கட்டியே தீருவோம்.
மைசூரு :

மைசூருவில் நேற்று கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களிடம் கூறியதாவது:-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம். அணை கட்ட விரிவான திட்ட அறிக்கையையும் சமர்ப்பித்து உள்ளோம். அந்த அறிக்கையை பரிசீலனை செய்து அணை கட்ட மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் மேகதாதுவில் அணை கட்டப்படுவது உறுதி. அணையை கட்டுவதற்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் கர்நாடக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகம் தண்ணீர் விஷயத்தில் எப்போதும் அரசியல் செய்து வருகிறது.

காவிரி நதிநீர் விஷயத்திலும் தமிழகம் அரசியல் செய்தது. தற்போது மேகதாது அணை விவகாரத்திலும் தமிழகம் அரசியல் செய்கிறது. இந்த அணை கட்டும் விஷயத்தில் தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர் என்ன கூறினாலும் அதை கேட்க மாட்டோம். அணையை கட்டியே தீருவோம்.

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக டெல்லிக்கு சென்று மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுவேன். அப்போது அணை கட்டும் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கூறிய தீர்ப்பு பற்றியும், இந்த திட்டத்தின் உண்மை நிலையையும் எடுத்து கூறுவேன்.

மேலும் இந்த விவகாரத்தில் சட்டகுழுவினருடன் ஆலோசனை மேற்கொள்வேன். காவிரி படுகைகளில் உபாிநீரை கர்நாடகம் பயன்படுத்துவது குறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் சட்ட நடவடிக்கை எடுப்பார். இந்த அணை திட்டம் முழுக்க, முழுக்க விவசாயிகள் நலனுக்கானது. இதில் அரசியல் இல்லை. மேகதாது பல்நோக்கு திட்டம். இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீருவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News